மும்பை இந்தியன்ஸ் – ஹாட்ரிக் தோல்வி…!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

புனே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், திலக் வர்மா 38* ரன்களும், கடைசி ஓவரில் ருத்ரதாண்டம் ஆடிய பொலார்ட் 5 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ரஹானே 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்பின் களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயர் (10), சாம் பில்லிங்ஸ் (17), நிதிஷ் ராணா (8) மற்றும் ஆண்ட்ரியூ ரசல் (11) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர்.

இதனையடுத்து களத்திற்கு வந்த பாட் கம்மின்ஸ், போட்டியின் துவக்கத்தில் இருந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயருடன் கூட்டணி சேர்ந்தார். கம்மின்ஸ் களத்திற்கு வந்ததும் அவரது விக்கெட்டை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி பும்ராஹ்விடம் ஓவர் கொடுத்தது, ஆனால் பாட் கம்மின்ஸோ பும்ராஹ் வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து டேனியல் சம்ஸ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் 34 ரன்கள் குவித்து, 14 பந்துகளில் அரைசதம் கடந்து வரலாறு படைத்தததுடன் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய வெற்றியையும் பெற்று கொடுத்தார்.

பாட் கம்மின்ஸின் ருத்ரதாண்டவ ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

#Abdh

Previous article14 பந்துகளில் அரைசதம் கடந்து வரலாறு படைத்த பாட் கம்மின்ஸ்
Next articleசாம்பியன் லீக் கால்பந்து -காலிறுதிப் போட்டி முடிவுகள்..!