முரளிக்கு அரசியல் மட்டுமல்ல விளையாட்டும் தெரியாததுதான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

முரளிக்கு அரசியல் மட்டுமல்ல விளையாட்டும் தெரியாததுதான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு நட்சத்திரமான முத்தையா முரளிதரன் அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

முத்தையா முரளிதரன் இலங்கையின் பிரபலமான Hiru தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையின் டெக்னிக்கல் கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் முரளிதரன், வீரர்கள் ஒப்பந்த விவகாரத்தை கையாண்ட விதத்தை விமர்சித்திருந்தார் .

அதிலும் குறிப்பாக இரண்டு சிரேஷ்ட வீரர்களான மத்தியூஸ், கருணாரத்ன ஆகியோர் இந்த ஒப்பந்த விவகாரத்தில் இளம் வீரர்களை தவறான முறையில் வழிப்படுத்தியதாக அவருடைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அது மாத்திரமல்லாமல் ஒப்பந்த விவகாரம் ‘பணம்’ என்று ஒற்றை வார்த்தையில் அடக்கப்பட்டிருப்பது போன்ற கருத்தும் அவரிடம் இருந்து வந்தது.

இந்தக் கருத்து தொடர்பில் இப்போது அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன இணைந்து முத்தையா முரளிதரனுக்கு மிகப்பெரிய விளக்க கடிதமொன்றை வரைந்துள்ளனர்.

‘பணம்’ என்று ஒற்றை வார்த்தைக்குள் இந்த ஒப்பந்த விவகாரம் உள்ளடக்கப் படவில்லை என்பதையும், அது மாத்திரமல்லாமல் இந்த ஒப்பந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படாததே வீரர்கள் ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கான பிரதானமான காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

நீங்கள் எங்களுக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி இலங்கை வந்தபோது, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நீங்கள் செயல்பட்டீர்கள். நீங்கள் அவுஸ்ரேலிய அணியின் ஆலோசகராக செயற்படுகின்ற போது ‘பணம்’ என்று ஒற்றை வார்த்தைக்குள் நீங்கள் உள்ளடக்கபடாமல் ஒரு பயிற்றுவிப்பாளராக நீங்கள் செயல்படுவதாகவே நாங்கள் எண்ணினோம் .அதிலே பெருமை பட்டோம்.

நீங்கள் அப்படி செய்கின்றபோது ‘பணம்’ என்கின்ற வார்த்தை கவனிக்கப்படவில்லை, ஆனால் எங்களுக்கு தரவேண்டிய ஊதியம் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகின்றபோது பணம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் இந்த ஒப்பந்த விவகாரம் விடுபட்டுப் போனது என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் உங்களோடு சேர்ந்து நாங்கள் விளையாடி இருக்கிறோம், ஆகவே உங்கள் சாதனைகள் முறியடிக்கப்படாதவை, உங்களுக்கு இன்னும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாது எங்களிடமும் ஒரு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

இந்த விடயத்தை உங்களுக்குப் புரியவைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்று அந்த கடிதத்தில் முரளிதரனுக்கு அஞ்சலோ மேத்யூஸ், திமுத் ஆகியோர் நினைவு படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே அரசியல் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து சிக்கலில் மாட்டிக்கொண்ட முரளி இப்போது கிரிக்கெட் தொடர்பிலும் கதைத்து சிக்கலில் மாட்டியுள்ளார்.

முரளிக்கு அரசியல் மட்டுமல்ல கிரிக்கட்டும் தெரியாதது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.