முஷீர் கானை பார்த்து கோலி சொன்ன சர்ச்சை வார்த்தை.. விளாசும் ரசிகர்கள்..உண்மை என்ன?

முஷீர் கானை பார்த்து கோலி சொன்ன சர்ச்சை வார்த்தை.. விளாசும் ரசிகர்கள்..உண்மை என்ன?

2025 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி முல்லான்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் படுமோசமாக விக்கெட்டுகளை இழந்து வந்தபோது, 20 வயது இளம் வீரர் முஷீர் கானை நம்பி ஆடுகளத்துக்கு அனுப்பினார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் முஷீர் கானை விராட் கோலி அவமானப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. உண்மையிலேயே விராட் கோலி என்ன சொன்னார் என்பது பற்றி பார்க்கலாம்.

முஷீர் கான் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை. இதுவே அவரது அறிமுகப் போட்டியாக அமைந்தது. இன்னும் ஒரு விஷயம் என்னவெனில், அவர் இதுவரை உள்ளூர் அளவில் கூட டி20 போட்டிகளில் விளையாடியது இல்லை; இதுவே அவரது முதல் டி20 போட்டியாக அமைந்தது.

முஷீர் கான் பேட்டிங் செய்ய வந்தபோது, விராட் கோலி அவரைப் பார்த்து “வாட்டர் பாய்” எனக் குறிப்பிட்டு அருகில் ஃபீல்டிங் நின்றிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய வசனம் கேட்கவில்லை என்றாலும் சைகை செய்தது தெளிவாக தெரிந்தது.

இதை வைத்து, “ஒரு இளம் வீரர் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறார். ஆனால் அவரை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்யும் வகையில் விராட் கோலி நடந்து கொண்டிருக்கிறார். இதை அந்த இளம் வீரர் பார்த்தால் அவரது மனது உடைந்து விடாதா?” என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து வேறு சிலரோ மற்றொரு விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது, இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, முஷீர் கான் தண்ணீர் எடுத்து வந்தார். அதன் பின் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் பேட்ஸ்மேனாக மாறி ஆடுகளத்திற்கு வந்தார்.

பொதுவாக மாற்று வீரர்கள் தான் தண்ணீர் எடுத்து வருவார்கள். ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற விதி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் 5 இம்பேக்ட் வீரர்களை அறிவிக்கலாம்; அவர்களும் மாற்று வீரர்கள்தான். அப்படி இம்பேக்ட் வீரராக இருந்த முஷீர் கான் தண்ணீர் எடுத்து வந்திருந்தார்.

பின்னர் அணியின் சூழ்நிலை கருதி அவரை விளையாட வைக்க ரிக்கி பாண்டிங் முடிவு செய்தார். அதனால், தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த முஷீர் கான் திடீரென பேட்டிங் செய்ய வந்ததைத்தான் விராட் கோலி அப்படி வியப்புடன் கூறினார்.

சிறிது நேரம் முன்பு முஷீர் கான் தண்ணீர் எடுத்து வந்ததைத்தான் விராட் கோலி தனது சக வீரர்களிடம் ஆச்சரியத்துடன் கூறுகிறார்; அவரை கிண்டல் செய்யும் வகையிலோ அவமானப்படுத்தும் வகையிலோ சொல்லவில்லை.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டிப் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Previous articleRCB யின் அசத்தல் ஆட்டம்..!
Next articleநீதான்யா பேட்ஸ்மேன்.. தமிழக வீரர் சாய் சுதர்சனுக்காக எழுந்து நின்ற மைதானம்.. என்ன ஆட்டம்!