யாராலும் தொட முடியாத சச்சினின் இந்த ODI சாதனையை கோலி எட்டுவார்.. ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட ஒரு சிறந்த வீரரை தான் பார்த்ததில்லை எனவும், சச்சினின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்கள் சாதனையை கோலி முறியடிக்கவும் வாய்ப்பு உள்ளது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தால், அது அவரது 51வது ஒருநாள் போட்டி சதமாக அமைந்திருக்கும். மேலும் அவர் 14000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார்.
தற்போது உலக அளவில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்) மற்றும் குமார் சங்ககாரா (14,234 ரன்கள்) ஆகிய இருவர் மட்டுமே விராட் கோலியை விட அதிக ரன்கள் அடித்த வீரர்களாக உள்ளனர். குமார் சங்ககாராவை இன்னும் சில போட்டிகளிலேயே விராட் கோலி முந்திவிடுவார்.
ஆனால், சச்சின் டெண்டுல்கரை முந்த வேண்டும் என்றால் இன்னும் 4341 ஒருநாள் போட்டி ரன்கள் எடுக்க வேண்டும். விராட் கோலிக்கு தற்போது 36 வயதாகும் நிலையில், சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது.
விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சினின் சாதனையை முறியடிப்பது பற்றி ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார். “விராட் கோலியை விட ஒரு சிறந்த 50 ஓவர் வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார். இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க விரும்புவார்.”
“உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார். ஆனால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா? என்று யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது. விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும், இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4000 ரன்களை குவிக்க வேண்டும்.”
“இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது” என்றார் ரிக்கி பாண்டிங்.