யுக்ரேன் மாணவர்களுக்கு தோள் கொடுக்கும் பிரபல டென்னிஸ் வீரர்!

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், யுக்ரைன் மாணவர்கள் மீண்டும் கல்வியைப் பெற தனது அறக்கட்டளை வாயிலாக பாரிய அளவு நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணங்களை வழங்கும் யுக்ரேனின் நலன்புரி அமைப்பு ஒன்றுக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர் நிதியினை அவர் வழங்கியுள்ளார்.

யுக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம்24-ம் திகதி போர் தொடுத்தது.

அன்று முதல் சுமார் 30 லட்சம் பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா.அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது யுக்ரைன் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதம் எனவும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக ரோஜர் பெடரர் தனது ட்விட்டர் பதிவில்,“யுக்ரைனில் இருந்து வரும்புகைப்படங்களைப் பார்த்து நானும் எனது குடும்பத்தினரும் திகிலடைகிறோம், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக மனம் உடைந்துள்ளோம். நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம். யுக்ரைனில் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வழங்குவோம். சுமார் 60 லட்சம் உக்ரேனிய மாணவர்கள் தற்போது பாடசாலையை விட்டு வெளியே உள்ளனர். அவர்களுக்கு கல்விக்கான அணுகலை வழங்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம்” என்று தெரிவித்துள்ளார்