ராகுலுக்கு அபராதம் – ICC அறிவிப்பு

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால், 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 92 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமில்லாததால், முன்கூட்டியே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

கேப்டன் விராத் கோலி (22 ரன்), ரவீந்திர ஜடேஜா (9 ரன்) களத்தில் உள்ளனர். ரோகித் சர்மா 127 ரன்களும் கே.எல்.ராகுல் 46 ரன்களும் புஜாரா 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முன்னதாக, கே.எல்.ராகுல் 101 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர் சன் பந்து வீச்சில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்தார். முதலில் நடுவர் அவருக்கு அவுட் கொடுக்கவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ரிவியூவ் கேட்டார்.

அப்போது ராகுலின் பேட்டில் பட்டு பந்து செல்வது உறுதியானதை அடுத்து நடுவர் தனது முடிவை மாற்றி அவுட் என்று கையை உயர்த்தினர். இதை ஏற்றுக்கொள்ளாத ராகுல், தலையை ஆட்டியபடி பெவிலியன் திரும்பினார்.

நடுவரின் முடிவுக்கு கருத்து வேறுபாடு காட்டிய ராகுல் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அவர் சம்பளத்தில் 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது.

#ABDH