ராகுல் இல்லை..டெல்லி அணியின் புதிய துணைகேப்டனாக பிரபல ஆர்சிபி, சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு
டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டு பிளெசிஸை ஐபிஎல் 2025-க்கான துணை கேப்டனாக அறிவித்துள்ளது.
40 வயதான இவர், ரிஷப் பந்த் அணியை விட்டு வெளியேறிய பிறகு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேலுக்கு துணையாக இருப்பார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டுபிளசிஸ், நான் டிசி-யின் துணை கேப்டன், மிகவும் உற்சாகமாக உள்ளேன். டெல்லி அருமையாக உள்ளது, சக வீரர்கள் அற்புதமாக இருக்கிறார்கள். நிச்சயமாக நான் மகிழ்ச்சியாகவும், தயாராகவும் உணர்கிறேன்,” என்று கூறினார்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, பாஃப் டு பிளெசிஸ் மூன்று ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி அணியை வழிநடத்தினார். டிசி அவரை அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு இணைத்தது. அவர் ஆர்சிபி அணியை 42 போட்டிகளில் வழிநடத்தினார். அவரது தலைமையில் ஆர்சிபி 21 போட்டிகளில் வென்று, 21 போட்டிகளில் தோல்வியடைந்தது.
மூன்று சீசன்களில் இரண்டு முறை அவர் ஆர்சிபி-யை பிளேஆஃப்ஸுக்கு அழைத்துச் சென்றார். மேலும், 2024 கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். டிசி அணி, ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டியில் மார்ச் 24 அன்று விசாகப்பட்டினத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் எல்எஸ்ஜி கேப்டன் கே.எல். ராகுல் தலைமைப் பொறுப்பில் இல்லை. அவர் 14 கோடி ரூபாய்க்கு அந்த அணியால் வாங்கப்பட்டார். இந்த சூழலில் கேப்டன் பதவி வேண்டாம் என மறுத்த நிலையில், தற்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவில்லை.
இந்த சூழலில் அக்ஸர் கேப்டனாக பொறுப்பேற்றது பற்றி பேசுகையில், “டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்களுக்கும், ஆதரவு குழுவினருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
“இங்கு கேப்பிடல்ஸ் அணியில் இருந்தபோது ஒரு கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் நான் வளர்ந்திருக்கிறேன். இனி இந்த அணியை வழிநடத்துவதற்கு நான் தயாராகவும், நம்பிக்கையுடனும் உணர்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். கடந்த சீசனில் ரிஷப் பந்த் மெதுவான ஓவர் விகிதத்தை பராமரித்ததற்காக ஒரு போட்டி தடை பெற்றபோது, அக்ஸர் தனது ஐபிஎல் கேப்டன்ஸி அறிமுகத்தை ஆரம்பித்தார்.
ஆர்சிபி-க்கு எதிரான அந்த போட்டியில், அக்ஸரின் கேப்டன்ஸி அறிமுகம் தோல்வியில் முடிந்தது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டிசி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி-யிடம் தோல்வியடைந்தது.