ராணுவ கழகத்துக்காக கலக்கிய மட்டு மைந்தன் தேனுரதன்..!

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 10 போட்டிகள் கடந்த (16) அன்று நடைபெற்றன.

இதில் ப்ளூம்பீல்ட் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகமும், சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான முவர்ஸ் விளையாட்டுக் கழகமும் வெற்றிகளை ஈட்டி முறையே குழு A இல் முதலிரெண்டு இடங்களைப் பிடித்தன.

மறுபுறத்தில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகமும், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகமும் வெற்றிகளைப் பதிவு செய்து B குழுவில் முதலிரெண்டு இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இந்த நிலையில், ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் சச்சித்ர சேனாநாயக்க சதமடித்து அசத்தியிருந்தார். List A போட்டிகளில் அவரது 2ஆவது சதம் இதுவாகும். 37 வயதான சச்சித்ர, இம்முறை முதல்தர ஒருநாள் தொடரில் கடற்படை கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த வருகின்ற வீரராக வலம்வருவதுடன். இதுவரை 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே, இம்முறை முதல்தரப் போட்டிகளில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் தடவையாகக் களமிறங்கிய ரத்னராஜ் தேனுரதன், இராணுவ கழகத்துக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது அவரது அறிமுக லிஸ்ட் ஏ போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பைச் சேர்ந்த 23 வயதான வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான இவர், கடந்த சில ஆண்டுகளாக இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

அதேபோல, பாணந்துறை விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகம் 116 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியதுடன், குறித்த போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த அந்த அணியின் தலைவர் திசர பெரேரா அரைச் சதம் (56) அடித்து அசத்தினார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 252/8 (45) –

திசர பெரேரா 56, மஹேஷ் குமார 43, யொமேஷ் ரணசிங்க 3/42, தனுக ரணசிங்க 2/22

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 137/10 (29.4)

– நிமேஷ் விமுக்தி 36, கோஷான் தனுக 26, சுமிந்த லக்ஷான் 3/24, ரத்னராஜ் தேனுரதன் 3/43

முடிவு – இராணுவ விளையாட்டுக் கழகம் 116 ஓட்டங்களால் வெற்றி

via -Thepapare