“ரிஸ்வான் ஒரு பைத்தியம்”.. இந்தியாவுக்கு எதிரான தோல்வி.. நேரலையில் மோதி கொண்ட சோயிப் அக்தர், மாலிக்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறதும் அது மட்டும் இல்லாமல் கடந்த எட்டு முறை இரு அணிகளும் மோதி இருக்கிறது.
இதில் ஏழு ஆட்டத்திலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. இப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது அந்நாட்டு முன்னாள் வீரர்களை கடுப்படைய செய்திருக்கிறது.
பலரும் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், “நேரலையில் ரிஸ்வானை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இது குறித்து பேசிய அவர், வீரர்களுக்கு எதிராக எனக்கு தனிப்பட்ட முன் விரோதம் எதுவும் இல்லை.”
“எனக்கு மட்டும் பணம் தரவில்லை என்றால் நான் இங்கே வந்து பாகிஸ்தான் அணி குறித்து விவாதத்தில் கூட பங்கேற்று இருக்க மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த அணி குறித்து பேசவே எனக்கு விருப்பமில்லை .2011 ஆம் ஆண்டிலிருந்து நான் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசி முடித்து விட்டேன்.”
“கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ரிஸ்வான் போன்ற பைத்தியக்காரனை எல்லாம் கேப்டனாக நியமித்து வினோதமான வீரர் தேர்வை செய்தால் முடிவுகள் இந்த மாதிரி தான் இருக்கும்” என்று சோயிப் அக்தர் கூறினார்.
அப்போது உடனே குறுக்கிட்ட சோயிப் மாலிக், “உங்களுக்கு இவ்வளவு கோபம் என்றால் நீங்கள் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இணைந்து அனைத்தையும் சரி செய்ய க்கூடாது.நீங்கள் இப்படி பேசுவதற்கு பதில் சரி செய்ய முன் வரலாம்” என்று கோபமாக கூறினார். இதற்கு கோபமாக பதில் கூறிய சோயிப் அக்தர், “நான் அனைத்தையும் துறந்து பாகிஸ்தான் அணிக்காக என்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்ய தயார்.”
“எனக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு அணியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கூட தாருங்கள். நான் என் குடும்பத்தை எல்லாம் விட்டுவிட்டு பாகிஸ்தான் அணிக்காக பணியாற்ற தயார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய விதி என்னவாகும் என்று எனக்கு தெரியும்.இருந்தாலும் பரவாயில்லை” என்று சோயிப் அக்தர் பதிலளித்தார். நிலைமை கொஞ்சம் சிக்கலாக மாறியதை உணர்ந்த முகமது ஹபீஸ்,”மூன்று ஆண்டுகள் வரை உங்களை பணியாற்ற விடுவார்களா” என்று கூற, உடனே அரங்கில் சிரிப்பலை எழுந்தது.