ரோஹித் சர்மாவுக்கு நடந்தது அநீதி இல்ல.. இந்த நல்ல விஷயத்தையும் பாருங்க.. ஆரோன் பின்ச் பேட்டி..!

ரோஹித் சர்மாவுக்கு நடந்தது அநீதி இல்ல.. இந்த நல்ல விஷயத்தையும் பாருங்க.. ஆரோன் பின்ச் பேட்டி

மார்ச் 22ஆம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்க உள்ளது. ஆனால் இம்முறை ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்று சொல்லலாம்.

ஏனெனில் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறி வந்த மும்பைக்கு 2013ஆம் ஆண்டு ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது முதல் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்றுக் கொடுத்த அவர் மும்பை இன்று வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார்.

ஆரோன் பின்ச் கருத்து:

அதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறிய ரோகித் சர்மா தற்போது உலக அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆனாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்டுள்ள மும்பை அணி குஜராத்திடமிருந்து பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதனால் கோபமடைந்த ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த அறிவிப்பு வெளியான ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் மும்பையை பின்தொடர்வதை நிறுத்தினார்கள்.

அத்துடன் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் மும்பையின் ஜெர்சியை கழற்றி தூக்கி எறிந்த வீடியோக்களை பதிவிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில் நன்றி மறந்த மும்பை நிர்வாகம் ரோகித்துக்கு அநீதி இழைத்ததாகவே பல ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த முடிவால் கேப்டன்ஷிப் பாரம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக அழுத்தமின்றி விளையாடும் நல்ல விஷயம் ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளதையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை மற்றும் இந்திய அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடியதைப் போல இம்முறை ரோகித் சர்மா சாதாரண பேட்ஸ்மேனாக நடந்து செல்ல வேண்டும் என்பது மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது அவருடைய தோளில் உள்ள பாரத்தை துடைத்து விட்டது”

“நீங்கள் அணியைத் தலைமை தாங்கும் போது ஒரு கேப்டனாக தொடர்ந்து அனைத்து இடத்திற்கும் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அந்த அழுத்தம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியும். இது தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நன்மையை கொடுக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் பெரிய ரன்கள் அடிக்க தடுமாறிய ரோஹித் இம்முறை கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.