ரோஹித் சர்மாவுடனான விரிசல்-மனம் திறந்து உண்மை பேசிய கோலி…!

இரண்டரை வருடங்களாக சொல்லி வருகிறேன், சோர்வாக உள்ளது: விராட் கோலி

எனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது.

மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கு அடுத்து விளையாடவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. தனது மகள் வாமிகாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதால் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்ததாகச் செய்திகள் வெளியானதால் சர்ச்சையும் குழப்பமும் ஏற்பட்டன. கோலி விலகல் தொடர்பான தகவல் வெளியான பிறகு, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவேண்டுமா, இந்திய அணி மீது அவருக்கு அக்கறை இல்லையா என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.

கோலியின் மகள் வாமிகா, கடந்த வருடம் ஜனவரி 11 அன்று பிறந்தார். தெ.ஆ. டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட், ஜனவரி 11 அன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. தெ.ஆ. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட நான் எப்போதும் தயாராக உள்ளேன். என்னிடம் இக்கேள்வியைக் கேட்கக்கூடாது. நான் கலந்துகொள்ளவில்லை என செய்தி வெளியிட்டவர்களைக் கேட்கவேண்டும். இதுபோன்ற செய்திகளை வெளியிடுபவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்லர். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட நான் எப்போதும் ஆர்வமாக இருப்பேன் என்றார். விராட் கோலி – ரோஹித் சர்மா இடையே மோதல் என்று வெளியாகிற செய்திகள் பற்றி கோலி கூறியதாவது:

எனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை. கடந்த இரண்டரை வருடங்களாக இதைத் தெளிவுபடுத்தி வருகிறேன். இதை மீண்டும் மீண்டும் சொல்வதற்குச் சோர்வாக உள்ளது என்றார்.

#ABDH