ரோஹித் சர்மாவை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய தோனி

ரோஹித் சர்மாவை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய தோனி

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு இதுவரை சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம்.

ஏனெனில் நான்கு முறை கோப்பையை கைப்பற்றியது மட்டுமின்றி நடப்புச் சாம்பியனாகவும் திகழ்ந்து வரும் சென்னை அணியானது தங்களது முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 131 ரன்களை மட்டுமே குவித்ததால் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது

. அதனைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது லீக் போட்டியின்போது 210 ரன்கள் குவித்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மோசமான தோல்வியை சந்தித்தது.

இப்படி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு தற்போது தங்களது மூன்றாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது . இந்த போட்டியில் 40 வயதாகும் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 38 பந்துகளைச் சந்தித்த அவர் 50 ரன்களை குவித்து அசத்தினார். அதோடு லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 6 பந்துகளில் 16 ரன்கள் அடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படி இந்த ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேனாக தோனிக்கு சிறப்பாக அமைந்து வரும் வேளையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் டி20 கிரிக்கெட்டில் 350 வது போட்டியில் விளையாடினார். இதன் மூலம் ரோஹித் சர்மாவிற்கு அடுத்த டி20 கிரிக்கெட்டில் 350 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் ரோகித் சர்மா 372 போட்டிகளுடன் முதல் இடத்திலும், தோனி 350 போட்டிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 336 போட்டிகளுடன் மூன்றாவது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 329 போட்டிகளின் நான்காவது இடத்திலும், விராட்கோலி 328 போட்டிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணிக்கு இந்த ஐபிஎல் தொடரானது சிறப்பாக அமையவில்லை என்றாலும் தோனி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி வருவது சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மத்தியில் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Abdh