லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றிவாகை சூடியது ஜப்னா கிங்ஸ் அணி ..!
இலங்கையில் இடம்பெற்று வந்த லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடரின் இரண்டாவது அத்தியாயம் இன்றைய நாளோடு வெற்றிகரமாக நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, 5 அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 24 ஆட்டங்களின் அடிப்படையில் இன்றைய நாளில் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தடவை கிண்ணத்தை தனதாக்கி மகுடம் சூடியதுடன்
தெற்கின் கனவை இரண்டாவது முறையாகவும் தவிடு பொடியாக்கியது .
இன்றைய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்ட வாய்ப்பை தமதாக்கிக் கொண்டார், இதன் அடிப்படையில் ஆரம்பம் மிக அமோகமாக அமைய துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய அவிஷ்க பெர்னாண்டோ 41 பந்துகளில் 63 ஓட்டங்கள் , குர்பாஸ் 18 பந்துகளில் 35 ,காட்மோர் ஆட்டமிழக்காது 41 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர், திசர பெரேரா தன்பங்களிப்பில் ஆட்டமிழக்காது 9 பந்துகளில் 17 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள , ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 எனும் இமாலய இலக்கை பெற்றது.
ஜப்னா கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் அவர்களுடைய துடுப்பாட்டத்தில் மொத்தமாக 12 சிக்ஸர்களும் , 15 பவுண்டரிகள் பெறப்பட்டமை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு விஷயம் என்று சொல்லலாம். மொத்தம் 132 ஓட்டங்கள் இவ்வாறே பெறப்பட்டன.
காலி அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆமீர் மற்றும் நுவான் துஷார, சமித்ப ட்டேல் ஆகியோர் ஒவொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். காலி கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் ஏராளமான கவனக்குறைவான களத்தடுப்பு (Miss field) , பிடி வாய்ப்புக்களை தவறவிட்டமை தாராளமாக நிகழ்ந்தமை சுட்டிக்காட்டதக்கது.
202 என்ற இமாலய இலக்குடன் களம் புகுந்த காலி அணிக்கு ஆரம்ப வீரர்கள் குஷல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணாதிலக ஆகியோர் வெறுமனே 20 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்றனர், அத்தோடு
26 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதலாவது விக்கெட்ப றிக்கப்பட்டது, வெறிகொண்டு ஆடிய தனுஷ்க குணதிலக்க 21 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். குசல் மெண்டிஸ் 28 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஆரம்பம் அமோகமாக அமைந்தாலும் மத்திய வரிசை சொதப்ப தனது ஆட்டத்தைத் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் விரைவாகவே காலி அணி இழந்தது, இறுதியில் 9 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மட்டுமேதான் பெற்றனர் .
ஹசரங்க, சதுரங்க சகோதரர்கள் 2 விக்கெட்டுகளையும் ,தீக்ஷன், சேல்ஸ், லக்மால் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலமாக இந்தப்போட்டியில் ஜப்னா அணி மீண்டுமொருதடவை LPL கிண்ணத்தை தனதாக்கியது. இந்த எல்பிஎல் போட்டி தொடரில் மூன்று தடவைகள் காலியிடம் தோல்வியை தழுவிய ஜப்னா கிங்ஸ் அணி இன்றைய முக்கிய இறுதிப்போட்டியில் பழிதீர்த்து கிண்ணத்தை சுவீகரித்தது.
கடந்த ஆண்டும் திஸர பெரேரா தலைமையிலான அணி அணி கிண்ணத்தை சுவீகரித்தமை போன்றே திஸர பெரேரா தலைமையிலான அணி இம்முறையும் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.