லட்டுல வச்சனு நினைச்சியா தாஸ்!சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானை பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி அபார வெற்றியை பெற்றது. கராச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டோனி டிசோர்சி 11 ரன்களில் ஆட்டம் இழக்க,கேப்டன் பெவுமா, வெண்டர் டூசன் ஆகியோர் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். சிறப்பாக விளையாடிய ரெக்கல்டன் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதேபோன்று நடுவரிசையில் விளையாடிய முன்னாள் கேப்டன் மார்கரம் 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முஹமது நபி இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் குர்பாஷ் 10 ரன்களிலும், இப்ராஹிம் சட்ரான் 17 ரன்களிலும் செடிக்குல்லாஹ் அடல் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹீது டக் அவுட் ஆனார்.
ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரஹ்மத் ஷா மட்டும் நிதானமாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணிக்காக கடுமையாக போராடினார். ஆனால் அவருக்கு எந்த ஒரு வீரரும் துணை நிற்கவில்லை. ரஷித் கான் 18 ரன்களும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 18 ரன்களும் எடுக்க கடைசிவரை அபாரமாக 92 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்த ரஹ்மத் ஷா பத்து ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் 208 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 107 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பி பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது தென்னாபிரிக்க அணிகளின் ரன் ரேட் 2.14 என்ற அளவில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மைனஸ் 2.14 என்ற அளவில் இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
தற்போது அதற்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நாளை ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஏ பிரிவை பொறுத்தவரை நியூசிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது.