லீக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணியின் அதிர்ச்சி தோல்வி!

கேரபாவோ கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு லண்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பலம் பொருந்திய மான்செஸ்டர் சிட்டி அணியுடன் வெஸ்ட் ஹாம் அணி மோதியது.

மான்செஸ்டர் சிட்டி அணியை பெனால்ட்டி முறையில் 5-3 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி வெற்றி கண்டுள்ள நிலையில் 9 ஆவது முறையாக கேரபாவோ வெற்றி கிண்ணத்தை சுவீகரிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது மான்செஸ்டர் சிட்டி அணி.

இந்நிலையில் இந்த போட்டியில் தொடர்ந்து நான்கு முறை சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியமை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தோல்வியினால் தொடர்ந்து நான்கு முறை கோப்பையை வென்று வந்த மான்செஸ்டர் அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லிவர்பூல்-ப்ரெஸ்டன் ஆகிய அணிகள் மோதிய மற்றொரு போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ப்ரெஸ்டன் அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி வெற்றி கண்டுள்ளது.

டோட்டென்ஹாம்-பர்ன்லி அணிகள் இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் டோட்டென்ஹாம் அணி வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற லிவர்பூல், டோட்டென்ஹாம் மற்றும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே 8 முறை சாம்பியனான லிவர்பூல் அணி வெற்றி கிண்ணத்தை இலக்கு வைத்துள்ளதால் ரசிகர்களின் கவனம் அணியின் பக்கம் திரும்பி உள்ளது.

மறுபுறம் கடந்த முறை இறுதிவரை பயணித்து மான்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வி அடைந்த டோட்டென்ஹாம் அணியும் இம்முறை கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.