இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று (30) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சார்பில் விளையாடிய வனிந்து ஹஸரங்க அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீச்சில் ஏமாற்றியிருந்தாலும், இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு கடுமையான சவாலை வனிந்து ஹஸரங்க கொடுத்திருந்தார்.
கொல்கத்தா அணியின் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் T20 போட்டிகளில் கடந்த காலமாக சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். இறுதியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இவருடைய துடுப்பாட்டம் இந்திய அணிக்கு மிக பலமாக அமைந்திருந்தது.
இவ்வாறான நிலையில் தன்னுடைய முதல் ஓவரின் 4வது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டினை வனிந்து ஹஸரங்க கைப்பற்றினார். தொடர்ந்து சுனில் நரைன், தனக்கே உரித்தான கூக்லி பந்தில் செல்டன் ஜெக்ஷன் மற்றும் டிம் சௌதி ஆகியோரின் விக்கெட்டுகளை ஹஸரங்க பதம் பார்க்க, கொல்கத்தா அணி 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பத்திலிருந்து தடுமாறினாலும் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் சிறப்பான பினிசிங் துடுப்பாட்டத்துடன் வெற்றியை தக்கவைத்தது.
பெங்களூர் அணியின் பந்துவீச்சை நேற்றைய தினம் தாங்கிப்பிடித்திருந்த வனிந்து ஹஸரங்க 4 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமாத்திரமின்றி இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் வனிந்து ஹஸரங்க வெற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது