வறுமையை வென்று தேசிய கிரிக்கெட்டில் நுழையும் இன்னுமொரு இளைஞர் – நடராஜன், சிராஜ் வரிசையில் வருகிறார் சங்காவின் பாசறையில் வளர்க்கப்பட்ட சகாரியா…!

இந்திய கிரிக்கெட் இப்போது மிகச் சிறந்த நிலையில் காணப்படுகின்றது, வரவிருக்கும் பருவத்தில் இரண்டு வெவ்வேறு அணிகளை BCCI ஒரேநேரத்தில் களமிறக்க உள்ளது.

விராட் கோலி & கோ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) பிஸியாக இருப்பதோடு, அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் முகம் கொடுக்கவுள்ளனர்.

இதனால் ஷிகர் தவான் இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான அணித்தலைமையை கொடுத்து ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது இளம் இந்திய அணி.

 

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கிருஷ்ணப்ப கௌதம் , சஞ்சு சான்சன், ஹார்டிக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, சேதன் சகாரியா போன்றவர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதிலே இளம் வேகப்பந்து வீச்சாளர் சாகரியாவின் கதை சற்று வித்தியாசமானது. IPL ல் இம்முறையே ராஜஸ்தான் ரோயல்ஸ் வேகப்பந்து வீச்சாளராக கன்னிப் பிரவேசம் மேற்கொண்டவர்.

போராடிப் போராடியே தோற்றுப்போகாமல், போராடினால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்கெல்லாம் கொடுத்த நடராஜன் மற்றும் சிராஜ் வரிசையில் நாம் சகாரியாவையும் கொண்டாடலாம்.

ஐபிஎல் 2021 போட்டிகள் ஏலத்துக்கு முன்னதாக தனது தம்பியை பறிகொடுத்தார், வறுமையில் வாடிய இவர் குடும்பத்துக்கு IPL ஏலம் மூலம் கிடைத்த 1.2 கோடி மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

தனது தம்பியை இழந்த பின்னர், அவரது தந்தையும் கடந்த மாதம் ஐபிஎல் போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலப்பகுதியில் இழந்தார்.

இப்போது இந்திய தேசிய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் சகாரியா இந்திய ஊடகமொன்றுக்கு பேட்டியளித்தார்.

“இதைப் பார்க்க என் தந்தை இங்கு வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் இன்று அவரை நிறைய இழக்கிறேன். ஒரு வருட காலப்பகுதியில் கடவுள் என்னை நிறைய ஏற்ற தாழ்வுகளைக் காணச் செய்துள்ளார் “

“நான் என் தம்பியை இழந்தேன், ஒரு மாதத்திற்குப் பிறகு எனக்கு ஒரு பெரிய ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தது. நான் கடந்த மாதம் எனது தந்தையை இழந்தேன், கடவுள் எனக்கு இந்திய அணிக்கான அழைப்பை விடுத்துள்ளார்.

என் தந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது நான் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இது ஈடுசெய்ய முடியாத வெற்றிடமாகும். இது எனது மறைந்த தந்தையுக்காகவும், எனது கிரிக்கெட்டைத் தொடர என்னை அனுமதித்த எனது தாய்க்காகவும் அர்ப்பணிக்கிறேன் ”என்று சகாரியா கூறினார்.

3 வேளை சாப்பிவிடுவதற்க்கே தடுமாறிய ஓர் குடும்பமொன்றிலிருந்து கிரிக்கெட் எனும் கனவை மட்டும் கையிலெடுத்த இளைஞன் இப்போது வெற்றி பெற்றிருக்கிறான் எனும் பொது நமக்கும் நம்பிக்கை நாற்று விடுகிறது எனலாம்.

நடராஜன், சிராஜ் வரிசையில் வரவிருக்கும் சகாரியா, இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா பணிப்பாளராக திகழும் IPL ராஜஸ்தான் அணியில் அருமையான வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் இளம் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.