விக்கெட் கீப்பிங் பயிற்சியில் சஞ்சு சாம்சன்.. ரிஷப் பண்ட்-க்கு ஆப்பு வைக்கப் போகும் கவுதம் கம்பீர்?
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் தங்களின் புதிய பயணத்தை தொடங்கவுள்ளனர்.
புதிய பயிற்சியாளராக பொறுப்புக்கு வந்துள்ள கவுதம் கம்பீர், அவருக்கு உதவியாக அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்கிறார். இவர் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு அளித்த ஃபீல்டிங் பயிற்சியில் பலரும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், வீரர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றனர்.
இதனை கவனித்த கவுதம் கம்பீர், இந்திய வீரர்களின் கொண்டாட்டத்தை பார்த்து சிரிக்க தொடங்கினார். வழக்கமாக இறுக்கமான முகத்துடன் இருக்கும் கவுதம் கம்பீர், இந்திய அணி வீரர்களுடன் சிரித்து ஜாலியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதையும் கவனிக்க முடிந்தது.
இதனால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3ல் களமிறங்கிய ரிஷப் பண்ட், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சஞ்சு சாம்சன் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், ரிஷப் பண்ட் பெஞ்ச் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி நிர்வாகம் போதுமான வாய்ப்புகளை அளிக்கவில்லை என்று கவுதம் கம்பீர் கூறி வந்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட் ஓரம் கட்டப்படுவாரோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு சஞ்சு சாம்சன் ஃபார்மில் உள்ளார். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என்று எந்த பேட்டிங் வரிசையிலும் சஞ்சு சாம்சன் விளையாடக் கூடியவராக உள்ளார். இதனால் கம்பீரின் திட்டத்திற்கு பொருந்திப் போகும் வீரராக சஞ்சு சாம்சன் இருப்பார் என்று பேசப்பட்டு வருகிறது.