விடைபெற்றார் டென்னிஸ் நட்சத்திரம் பெடரர்…!

“அழுதிருக்கிறேன், சிரித்திருக்கிறேன், சந்தோஷத்தையும், வலியையும் உணர்ந்திருக்கிறேன்”, தனது ஓய்வறிவிப்போடு ரோஜர் ஃபெடரரின் வார்த்தைகள் இது.

ஃபெடரர்!!!!

இவை அனைத்தையுமே, களத்திற்கு உள்ளேயும், வெளியேயும், உங்களால், நாங்களும் உணர்ந்திருக்கிறோம்!

ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்கள் மத்தியில் ஆட்டத்தையே மாற்றிய பேரரசன் நீ!

தரையில் கால்களையும், அந்தரத்தில் ராக்கெட்டையும், பந்தின் நகர்வுக்கேற்ப நடனமாட வைத்து, எங்களது கண்களை, இமைக்க மறுக்க வைத்த ஜாலக்காரன் நீ!!

உனது அதிவேக நகர்வில் காலத்தையே சற்றே இயங்க மறக்கடித்து, பின்தங்க வைத்த மாயாவி நீ!!!

உன்னைப் போல் எங்களை அதிகமாக அழ வைத்தவரும் இல்லை, கண்கள் வேர்க்க சிரிக்க வைத்தவருமில்லை, கண்ணீருக்கு எப்போதுமே உத்தரவாதம் தந்தவன் நீ!

டென்னிஸ் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்கள் பலர் உண்டு, அதில் கொண்டாடப்பட்டவர்கள் சிலர் உண்டு, ஆனாலும், உன்னைப் போல், அளவு கடந்த நேசிக்கப்பட்டவர்கள், ஸ்போர்ட்மேன்ஷிப்பின் தூதுவர்களாக வலம் வந்தவர்கள், களத்தைத் தாண்டியும், ஆராதிக்கப்பட்டவர்கள், விரல் விட்டு எண்ணி விடக்கூடியவர்களே!

புல்தரையும், கோர்ட் மொத்தமும், பந்தும், எதிராளியின் ராக்கெட்டும் என அத்தனையும் உன்னைத் தேடப் போகின்றன.

எந்த ஒரு டென்னிஸ் ரசிகனுக்கும், இனிவரும் எந்த விம்பிள்டனும், நீயில்லா வெறுமையை உள்புகுத்தி, முள்குத்தும் வலியை, தந்து கொண்டேதான் இருக்கும்……

போய் வா, டென்னிஸின் பேரரசே!

20 கிராண்ட் ஸ்லாம்கள், 8 விம்பிள்டன்களையும் தாண்டி, கோடிக் கணக்கான இதயங்களும் உன்னுடனே வந்து கொண்டிருக்கும், என்றென்றும்……

#RForever

#அய்யப்பன்