விராட் கோலி குறித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி பதிவு
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெள்ளிக்கிழமை இழந்த நிலையில், சனிக்கிழமை அவா் இந்தத் திடீா் அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, பல்வேறு தரப்பினர் கோலி குறித்து புகழாரம் சூட்டிவருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும்போது நீங்கள்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று கூறியது. அன்று நீங்கள், நான், தோனி மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். தோனி அன்று நகைச்சுவையாக உன் தாடி இவ்வளவு வேகமாக நரைக்க போகிறதே என்று கூறினார்.
அன்றிலிருந்து நான் கவனித்து வருகிறேன். உங்கள் தாடி மட்டும் நரைக்கவில்லை. உங்களின் வளர்ச்சியை பார்த்திருக்கிறேன், உங்களை சுற்றியும், உங்களுக்குள்ளும் வளர்ச்சி அபரிவிதமாக இருந்துள்ளது. நீங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட காலத்தை நினைத்து பெருமைப்படுகிறேன், உங்களது காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி செய்த சாதனைகளை கண்டு வியக்கிறேன். இதையெல்லாம் விட உங்களுக்குள் நீங்கள் சாதித்த வளர்ச்சியை நான் பெரிதாக நினைக்கிறேன்.
2014ஆம் ஆண்டு நீங்கள் மிகவும் அனுபவமற்ற, யாரையும் எளிதில் நம்பக்கூடிய இளம் வீரனாக இருந்தீர்கள், நல்ல திட்டங்கள் குறித்து யோசித்துக்கொண்டு இருந்தீர்கள். நேர்மறையான எண்ணங்களே உன் வாழ்க்கையை நகர்த்திச்செலும் என்று நம்பினீர்கள். அவை நிச்சயம் நடக்கும்.
ஆனால் அதில் சவால்கள் அதிகம் இருந்தது. நீங்கள் களத்துக்கு வெளியே சந்தித்த சவால்கள் ஏராளம், ஆனால் இது வாழ்க்கையல்லவா, நீங்கள் குறைவாக சவால்களை எதிர்பார்த்த இடத்தில் கூட உங்களுக்கு சவால்கள் அதிகமாகவே இருந்திருக்கிறது. உங்களது எண்ணங்களோடு நான் துணை நின்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் ஒரு தலைவனாக முன்னின்று வழிநடத்தினீர்கள், வெற்றிகளில்தான் உத்வேகம் இருக்கிறது என்பதை ஒவ்வொருமுறையும் உணர்த்துனீர்கள். சில நேரங்களில் தோல்வியடையும் போது நீங்கள் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் போது உங்கள் அருகில் அமர்ந்து உங்கள் வலியை உணர்ந்திருக்கிறேன்.
இன்னும் சிலவற்றை நான் செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன். இதுதான் நீங்கள், இதைத்தான் நீங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கிறீர்கள்.
நீங்கள் சமரசமற்றவர், நேர்மையானவர். பாசாங்கு உங்களின் எதிரி அதுதான் என் கண்களுக்கு உங்களை தலைவனாக காட்டியது. ஏனென்றால் நீங்கள் தூய்மையானவர், உன் கலப்படமற்ற நோக்கத்தை எல்லாராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னதை போல இந்த கண்கள் வழியே உங்கள் ஆளுமையை கண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
நீங்கள் மிகச்சரியானவர் அல்ல, உங்களுக்கும் சறுக்கல்கள் உண்டு. ஆனால், அதை எப்படி சரிசெய்கிறாய் என்பதே உங்களது தனித்தன்மை. நீங்கள் சரியானதையே செய்கிறீர்கள், அதற்காக கடுமையாக உழைக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் எதற்காவும் பேராசை பட்டது கிடையாது. எனக்கு தெரியும் இந்த கேப்டன் பதவியும் அப்படிதான்.
ஏனெனில் ஒருவர் ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அவர்கள் அதோடு தனது எல்லையை சுருக்கி கொள்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள்தான் என் காதல், நீங்கள் எல்லைகளற்றவர். இந்த 7 வருடங்களில் நமது மகள் தந்தை என்னவெல்லாம் கடந்து வந்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Abdh