விராட் கோலி ,ரவி சாஸ்திரி கூட்டணி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய சேவைகள்

விராட் கோலி ,ரவி சாஸ்திரி கூட்டணி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய சேவைகள்

2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ஒன்றை டிரா செய்து, இரண்டில் தோற்று தொடரை இந்தியா இழந்திருந்தபோது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து கேப்டனாகவே ஓய்வை அறிவிக்கிறார். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக அவசரமாக அறிவிக்கப்ட்டு அந்தப் போட்டியிலயே அபார சதம் காண்கிறார்.

தோனியின் இடங்களான கேப்டன், விக்கெட் கீப்பர், பினிசர் என்ற இடங்களை யாராலும் அவ்வளவு எளிதாக நிரப்பிடவே முடியாது. அதுவும் அவர் தன் பாணிக்கு உகந்த வீரர்களைக்கொண்டு உருவாக்கி வைத்திருந்த ஒரு டெஸ்ட் அணியை, SENA நாடுகளில் பெரிதாய் சாதிக்காத ஒரு அணியை பேட்டிங், பவுலிங் என்றில்லாது பீல்டிங் வரையிலுமே மறுசீரமைப்பு பண்ணவேண்டிய பொறுப்பு விராட் கோலிக்கு இருந்தது. இருந்ததுதான் ஆனால் அதை வெறியோடு தன்முனைப்போடு எடுத்துக் கொண்டவர் கோலி.

அவர் கேப்டனான பிறகு, முதலில் அவர் அணிக்குள் விதைத்தது எந்தவொரு ஆட்டத்திலும் வெற்றிக்காகவே மட்டுமே ஆடுவது என்கிற மனநிலையைத்தான்.

அடுத்து உடல் தகுதி. யாராய் இருந்தாலும் எவ்வளவு சிறப்பான ஆட்டநிலையில் இருந்தாலும், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் இல்லையென்றால் அணியில் இடம் கிடையாது. கிரிக்கெட்டிற்கு புட்பால் வீரர்களின் உடற்தகுதி தேவையில்லை என்கிற விமர்சனமெல்லாம் வந்தது. ஆனால் கோலி அதைப் பொருட்படுத்தவே இல்லை.

அடுத்து அவர் கண்முன் இருந்தது SENA நாடுகளில் அதிகப்படியாய் டெஸ்டில் தோல்வியைக் கைப்பிடித்தே விமானம் ஏற வேண்டியதிருப்பதிற்கான காரணமான திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத பற்றாக்குறை. இவற்றுக்கான அவரது கவனம், உழைப்பு, ஆதரிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். SENA நாடுகளில் இன்று டெஸ்ட் தொடரை வெல்லாவிட்டால் அது அதிர்ச்சியாய் எரிச்சலாய் இருப்பதற்கு காரணம் விராட் நம்மை எங்கும் வெற்றிக்குப் பழக்கப்படுத்தி இருப்பதால்தான்.

இப்படியான நிலையில்தான் குணாதிசயத்தில் அவரைப்போலவேயான இரவிசாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராய் வருகிறார். விராட் கோலிக்கு இப்போது இரு மூளை, நான்கு கைகள். தன் கனவு அணியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தவர் இதற்குப் பிறகு பாய ஆரம்பித்தார்.

ஆனால் 2015 உலகக்கோப்பையோடு அவரது ஒப்பந்தம் முடிய இரவியை விலக்கி தலைமைப்பயிற்சியாளராய் கும்ப்ளேவை கொண்டுவருகிறது BCCI. விராட் கோலியின் பாணிக்கு கும்ப்ளேவின் அதீத கட்டுப்பாடான அணியில் ஆதிக்கம் செலுத்தும் அவரது போக்கு ஒத்துப்போகவில்லை. கும்ப்ளே விலகுகிறார்.

இரவி மீண்டும் தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறார். அப்போதே அவரை நேர்காணல் செய்யாது கங்குலி அவமதித்ததாக புகார் எழுந்தது. ஆனால் விராட்கோலி பிடிவாதமாய் இருந்து இரவியை மீண்டும் ஆனால் இந்த முறை தலைமைப் பயிற்சியாளராய் கொண்டுவருகிறார். அதற்குப் பிறகுதான் முழுவேகத்தில் இந்திய டெஸ்ட் அணி புதிய உயரங்களைத் தொடுவதற்கான ஏணிகள் போடும் பணி முழுவேகத்தில் முடுக்கப்பட்டது!

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட்-இரவி கூட்டணியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் இவர்கள் இந்திய அணியை புதிய உயரங்களைத் தொட வைத்தவர்கள்.

விராட் ஒருபுறம் கடுமையான உடற்தகுதிகளை கட்டாயமாக்கி ஷமி வரை பிரியாணியைத் தியாகம் செய்ய வைத்து கூராக்கினார் என்றால், இரவி இன்னொருபுறம் பும்ராவை டெஸ்ட் அணிக்குள் கொண்டுவருவது, டெஸ்டிலும் ரோகித்தை துவக்க ஆட்டக்காரராய் களமிறக்குவது என இந்திய கிரிக்கெட் சிவப்புப் பந்தில் யாரையும் எங்கும் வீழ்த்த ஆயுதங்களை இறக்குகிறார்.

இதிலும் கூட வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கத்தில் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர், தேசிய அகாடமியின் பங்குதான் பெரியதென்று சொல்வார்கள். ஆனால் ஒரு கேப்டன் விரும்பாமல், வெறித்தனமாக ஆதரிக்காமல் இது இந்திய கிரிக்கெட்டில் சாத்தியமே இல்லை.

ஆரம்பத்தில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவில் தோற்ற பொழுதும், கோலியை பாதுகாத்து இரவி மிக உறுதியாய் நம்பிக்கை வார்த்தைகளைப் பேசியபடியே இருப்பார். அதாவது நாங்கள் நாளைக்கான அணியை உருவாக்குகிறோம். தோல்வி வரவே செய்யும். ஆனால் தொடர்களில் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம். அதைப்பாருங்கள் எங்கள் உழைப்பு புரியும் என்பார். உண்மைதான் அவர்கள் எல்லா நாடுகளிலும் டெஸ்ட் போட்டியை வெல்லும் ஒரு அணியை உருவாக்கிக் கொண்டுதான் இருந்தார்கள் அப்போது.

இதற்குப் பின்னால் ஆஸ்திரேலியாவில் இரு தொடர், இங்கிலாந்தில் ஒரு தொடர் என்று அவர்கள் உழைப்பிற்கான பலனை BCCIயும் இரசிகர்களும் அறுவடை செய்தோம். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், இந்திய வேகப் பந்துவீச்சு படை இந்தியாவில் ஒரு இன்னிங்ஸின் மொத்தமாய் பத்து விக்கெட்டை கைப்பற்றும் அளவிற்கு மாறியதுதான்.

இந்தியாவில் டெஸ்டில் அதுவும் ரபாடா போன்ற வேகப்பந்து வீச்சாளரோடு வந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராய் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தைரியமாகப் போடப்பட்டது. இது இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு தொடர் முழுக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வசதியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் உருவாக்கப்பட்ட முதல் தொடர்!

விராட் கோலி கேப்டனாகாத இன்னிங்ஸ்களை பார்ப்பவர்களுக்கு ஒரு விசயம் தெளிவாய் புரியும். யார் சொல்லியும் பொறுப்பைச் சுமப்பவர் விராட் கிடையாது. ஆடுகளத்திற்குள் வந்துவிட்டால் தானாய் பொறுப்பை எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கி அம்பு போல் பயணிக்கும் துடிப்பான, அர்ப்பணிப்பான வீரர். அவர் சேஸிங் சதங்கள் சொல்லும் அவரின் பொறுப்பு சுமத்தல், அர்ப்பணிப்பை.

இப்படிப்பட்ட விராட்கோலிக்கு இரண்டு குறைகள் உள்ளது. ஒன்று சில ஓவர்களில் அல்லது ஒரே ஓவரில் ஆட்டம் மாறும் வெள்ளைப்பந்து போட்டிகளில் ஆட்ட சூழல் உணர்ந்து வியூகங்களை மாற்றும் திறன். அடுத்து ஒரு போட்டிக்கான சரியான கலவையோடு ஒரு அணியைத் தேர்ந்தெடுப்பது. இந்த இரண்டு குறைகளும்தான் அவரால் வெள்ளைப்பந்தில் கேப்டனாய் தொடர முடியாதிற்கான காரணம்.

இப்பொழுது சரியான அணியைத் தேர்வு செய்ய முடியாத குறை அவரை சிவப்புப்பந்து போட்டியிலும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் யார் ஆடாவிட்டாலும் விராட் தனியாய் ஆடிக்கொண்டிருக்கும் வரை அவரின் இந்தக்குறை சிவப்புப்பந்தில் பெரிதாய் வெளியே தெரியவில்லை. ஆனால் இன்று அவரே ரன் சேர்க்க தடுமாறுகின்ற நிலையில்தான் இந்தக் குறை பெரிதாய் வெளியே தெரிவதோடு, அணியின் வெற்றியையும் பாதிக்கிறது.

இதை விராட் உணர்ந்து ஈகோ பார்க்காமல் சரிசெய்து கொண்டால் அவர் டெஸ்ட் கேப்டனாய் தொடர்வார். உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஏதாவது தோல்வி வந்தால், விராட்-இரவி கூட்டணியின் செயல்பாடுகள் மேல் ஏற்கனவே வெறுப்பிலிருக்கும் கங்குலி,வேறு இரு விசயங்களால் தனிப்பட்ட கோபத்திலிருக்கும் மத்திய ஆளும் வர்க்கம் இவரை எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் வீரராய் மட்டுமே தொடர செய்துவிடும். இதுதான் இப்போதுள்ள எதார்த்த நிலை.

விராட்கோலியின் உழைப்பு, அர்ப்பணிப்பின் மீது குறையென்று எதையும் சொல்லவே முடியாது. இதையும் மீறி ஒருவர் சொல்கிறார் என்றால், ஒன்று அவருக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. இல்லையென்றால் உறுதியாய் சொல்லலாம் அவருக்கு விராட்கோலியின் மீது வெறுப்பு என்று!

“என் வயதில் நான் இவ்வளவு திறமையோடு பந்துகளை ஆடவில்லை. இவர் வலைப்பயிற்சியில் ஆடுவதைப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது”- இது வலைப்பயிற்சியில் Gillன் பேட்டிங்கை பார்த்து விராட்கோலி சொன்னது.

விராட் திறமைகளை மதிப்பவர் ஆதரிப்பவர். அவருக்குத் திறமையாளர்களை அதிகம் பிடிக்கும். தன் திறமையின் மீது நம்பிக்கை உள்ளவன் பிறரைப் பார்த்து ஒருநாளும் பொறாமைப்படவோ, வன்மம் கொள்ளவோ மாட்டான். விராட்கோலி இப்படித்தான்.

இப்படிப்பட்ட விராட் தன் முடிவுகளின் மீதான பிடிவாதத்தைக் கைவிட்டு சில மாற்றங்களுக்கு முன்வர வேண்டும். நான் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலியை கேப்டனாக பார்க்க மட்டுமே ஆசைப்படுகிறேன்.

ஏனென்றால் நவீனக்கால கிரிக்கெட்டின் இராஜாவாக இருந்தாலும். மரபான கிரிக்கெட் ஆட்ட முறையை முழுமையாக கைவிடாது, கிரிக்கெட்டின் மரபான டெஸ்ட் கிரிக்கெட்டின் விளம்பர தூதுவராக, ஆக்ஸிஜனாக உள்ள விராட்கோலிக்கு டெஸ்ட் இரசிகனாக நான் செய்யும் நன்றி ஒரு சின்ன நியாயமான கைமாறு!

விராட்டின் மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் கிடையாது அணித்தேர்வில் செய்யும் மோசமான குளறுபடிகளால்தான் விமர்சனம்

Richards