227 ரன்களுக்கு ஆஸி டிக்ளர்; இலக்கை துரத்தும் பாகிஸ்தான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட், லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில் அபாரமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் உஸ்மான் கவாஜா 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையடுத்து 3ஆவது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 31 ஓவர்களும் நாளை 90 ஓவர்களும் என மொத்தமாக இந்த இலக்கை அடைய பாகிஸ்தான் அணிக்கு 121 ஓவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் – அப்துல்லா ஷஃபிக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இமாம் உல் ஹக் 42 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
#Abdh