வெல்டன் பாகிஸ்தான் .

வெல்டன் பாகிஸ்தான் .

அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனது மண்ணில் வைத்து அபாரமாக வெற்றி கொண்ட தென்னாபிரிக்கா..அதே போல நியூஸிலாந்து சற்றுப் பயணத்தில் நியூசிலாந்துக்கெதிரான இரண்டு டெஸ்டுகளிலும் படு கேவலமாக தோல்வி சுவைத்த பாக்கிஸ்தான்..இரண்டு அணிகளும் கராச்சியில் முதலாவது டெஸ்டில் கடந்த 2021-01-26ம் திகதி மோதலை ஆரம்பித்த போது எகிறிய எதிர்பார்ப்புகளுடன் லைவ் பார்க்கலாமென்று டீவியின் முன்னால் அமர்ந்திருந்தேன்.

நியூஸிலாந்து டுவரில் இடம் பெற்றிராத பாபர் அசாமின் தலைமைத்துவத்தோடு மீள் வருகை செய்திருக்கின்றார். இந்த முறை பாக்கிஸ்தான் ஜெயிக்குமென்று பட்சி சொன்னாலும் பாக்கிஸ்தான் தனது முதல் இன்னிங்சின் போது 27 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்று ஸ்கோர் கார்ட் காட்டியதும் “போடாங்….” என்று மனசு பாக்கிஸ்தானை பார்த்து திட்ட ஆரம்பித்து விட்டது.

ஆனாலும் பவாத் ஆலமின் மறக்கவே முடியாத அந்த அற்புதமான சதம் பாக்கிஸ்தானுக்கு முதல் இன்னிங்ஸ் நம்பிக்கையை கொடுத்தது. இதோ பாக்கிஸ்தான் ஆட்டத்தின் நான்காவது நாளான இன்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. வாழ்த்துகள் பாக்கிஸ்தான்.

இது வரை பாக்கிஸ்தான் கராச்சி மைதானத்தில் மொத்தமாக 42 டெஸ்டுகள் ஆடி இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வி கண்டுள்ளது. இன்றோடு 43 டெஸ்டுகள்.

பாக்கிஸ்தான் கடைசியாக இந்த மைதானத்தில் தோல்வி கண்டது 2007ம் ஆண்டு இதே தென்னாபிரக்காவுக்கெதிராகத்தான். கராச்சி எங்கள் கெத்து என்பதனை மறுபடி பச்சை நிறப் பார்ட்டி நிரூபித்துள்ளார்கள்.

தென்னாபிரிக்காவுக்காவின் முதல் இன்னிங்ஸ் 220க்கு பதில் கொடுத்த பாக்கிஸ்தானின் 378…இரண்டாம் இன்னிங்சில் தென்னாபிரிக்காவுக்கு ஸ்கோர் செய்ய நிறைய வாய்ப்புகள் இருந்தும் 245 க்குள்ளே பெவிலியனுக்கு போயே விட்டார்கள். ஆட்டத்தின் மூன்றாம் நாளின் போது தென்னாபிரிக்கா நன்றாகத்தான் ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் யாசிர் ஷாவும் அறிமுக வீர்ர் நுஹ்மான் அலியும் சேர்த்து வைத்து செய்த சம்பவத்தில் 245 க்குள்ளே தென்னாபிரிக்கா முடியாமல் சுருண்டு விட்டார்கள்.

நடந்து முடிந்த இந்த டெஸ்ட் போட்டி ஒரு கூட்டு முயற்சியின் கொண்டாட்டம். பாக்கிஸ்தானின் டீம் வேர்க் தில்லானா மோகனாம்பாள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து யாஸிர் ஷா பெற்றுக் கொண்ட மொத்தமாக ஏழு விக்கெட்டுகள்…அறிமுக வீரர் நுஹ்மான் அலியின் ஏழு விக்கெட்டுக்ள…அதிலும் குறிப்பாக அவர் இரண்டாம் இன்னிங்கசில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து தென்னாபிரிக்காவின் அடி மடியில் கை வைத்து அவர்களை அலற விட்டிருந்தார். அதே போல அசார் அலி மற்றும்; பாஹிம் அஷ்ரபின் அரைச் சதங்கள்….என்று பாக்கிஸ்தானின் கூட்டுத் தயாரிப்பிலான வெற்றியின் மாஸ்டர் கதை தொடர்கின்றது.

ஆனால் அத்தனையிருந்தும் பவாத் ஆலமின் அந்த அற்புதமான சதம்தான் பாக்கிஸ்தானின் வெற்றிக்கு கொங்கரீட் அடித்தளமிட்டது எனலாம்.

பாக்கிஸ்தானின் முதல் இன்னிங்சின் போது 27 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்று கரன்ட் கம்பி வௌவாலாக பாக்கிஸ்தான் தொங்கிக் கொண்டிருந்த போது (பாக்கிஸ்தானுக்கு டெஸ்டில் இன்னும் ஓப்பனிங் பெயார்ஸ் அமையவே இல்லை…அய்யோ பாவம்..கொஞ்சம் அந்த டிப்பார்ட்மென்ட் பக்கம் போய் கொஞ்சம் வேர்க் பண்ணுங்கப்பு…) களத்துக்கு வந்து பொறுமை காத்து சதமடித்து பாக்கிஸ்தானின் வெற்றிக்கான விதையை பக்காவாகப் போட்டுச் சென்ற பவாத் ஆலமின் அந்த சதத்தினை கராச்சி என்றைக்குமே மறக்காது என்பது மட்டும் எப்பேர்ப்பட்ட உண்மை.

பவாத் ஆலம்தான் இன்றைய ஆட்ட நாயகன். பாக்கிஸ்தானின இந்த வெற்றியோடு அவரது சதம் என்றைக்கும் உசிரோடிருக்கப் போகின்றது.

கராச்சி துடுப்பாட்ட வீரர்களின் சொர்க்காபுரி…வேகப் பந்து வீச்சாளர்களின் வேடந்தாங்கல்..ஆனால் தென்னாபிரிக்கா அணியினர் அந்த சொர்க்காபுரியை பயன்படுத்த தவறி விட்டனர். அதே போல வேகப் பந்து வீச்சாளர்களை பாக்கிஸ்தானிய யாசிர் ஷாவும் நுஹ்மான் அலியும்; ஓவர் டேக் பண்ணி ப்ரோட்டீசின் விக்கெட்டுகளில் ஸ்பின் சூனியம் செய்து விட்டனர்.

கிரிக்கெட் என்பதே எப்போதும் ஒரு மெஜிக்கல் கேம்தானே. எதிர்பாராதது நடக்கும்..எதிர்பார்த்தது நடக்காமல் போய் விடும். இன்றைய மேடச்சில் பாக்கிஸ்தான் 88 என்ற வெற்றி இலக்கை துரத்திய போது 23 ஓட்டங்களுக்கு அதன் இரண்டு விக்கெட்டுகள் கழன்று விழுந்த போது ஆஹா மறுபடியுமா இன்று என்னாகப் போகின்றதோ என்று நினைத்துக் கொண்டேன். பாபர் அசாமும் அசார் அலியும் காப்பாற்றி விட்டனர்.

ஒரு வேளை தென்னாபிரிக்கா பாக்கிஸ்தானுக்கு இருநூறு ப்ளஸ் ஓட்டங்களை இலக்காக கொடுத்திருந்தால் போட்டி சவாலாக அமைந்திருக்கும்.

ஆனாலும் கராச்சியில் பாக்கிஸ்தானிய வீரர்கள் பலர் செமையாக தமது துடுப்பால் தரமான சம்பவம் செய்திருக்கின்றர் என்பதுதான் அதன் இது வரையான வரலாறு.

இதற்கு முன்னர் இதே மைதானத்தில் இலங்கைக்கெதிராக நடந்து முடிந்த டெஸ்டில் பாக்கிதானின் ஷான் மசூத், அசார் அலி, ஆபித் அலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சதமடித்திருந்தனர்.

 

இலங்கைக்கெதிரான அந்த மெட்சில் இரண்டாம் இன்னிங்சில் பாக்கிஸ்தான் 555/3 க்கு ஆட்டத்தை டிக்ளேயர் செய்திருந்தது. அதே போல அந்த மெட்ச்சில் சஹீன் ஷா அப்ரிடி, முகம்மது அப்பாஸ் மற்றும் நசீம் ஷா மூவரும் பதினாறு விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர். ஏனெனில் கராச்சி எப்போதுமே வேகப் பந்து வீச்சாளர்களின் வாசஸ்தலம். ஆனால் இந்த முறை சுழற’பந்து வீச்சாளர்கள் தமக்கு சாதகமாக ஆடு களத்தை மாற்றிக் கொண்டார்கள்.SAvPAK

வெல் டன்..பாக்கிஸ்தான்..எதிர் வருகின்ற பெப்ரவரி நான்காம் திகதி ராவல்பின்டியில் ஆரம்பிக்கப் போகின்ற இரண்டாவது டெஸ்டில் இதை விடவும் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கின்றோம்.

2007ம் ஆண்டு இதே தென்னாபிரிக்காவிடம் 160 ஓட்டங்களால் பாக்கிஸ்தான் தோல்வி கண்டிருந்தது. அந்தத் தோல்விக்கு சரியாக பதினான்கு வருடங்கள் காத்திருந்து பதிலடி கொடுத்திருக்கின்றார்கள்.

கிண்ணியா சபருள்ளாஹ்
(சட்டத்தரணி)
2021-01-29