வேறு யாருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை.. தினேஷ் கார்த்திக் செய்த தவறு.. சுட்டிக்காட்டிய ரஸ்ஸல்!

வேறு யாருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை.. தினேஷ் கார்த்திக் செய்த தவறு.. சுட்டிக்காட்டிய ரஸ்ஸல்!

கடைசி நேரத்தில் ஆர்சிபி அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் வேறு யாருக்கும் ஸ்ட்ரைக் வழங்காமல் பேட்டிங் செய்ததை கணித்து பவுலிங் செய்தது கேகேஆர் அணிக்கு சாதகமாக இருந்ததாக ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ரஸ்ஸல் அமைந்தார். பேட்டிங்கில் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்க்க ரஸ்ஸல், பவுலிங்கில் 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிட்சில் ஸ்லோயர் பந்துகளை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக அமைந்த நிலையில், அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது.

இதன் காரணமாக ரஸ்ஸலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து ரஸ்ஸல் பேசுகையில், கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நான் எப்போதும் பவுலிங் செய்ய விரும்புவேன். முக்கியமான தருணத்தில் பவுலிங் செய்ய என் கைகளுக்கு பந்து அளிக்கப்பட்டது. நான் நன்றாக பவுலிங் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது சரியாக நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 2 புள்ளிகள் பெற்றது தான் மகிழ்ச்சி.

நான் பேட்டிங் செய்யும் போது வேகத்தில் மாற்றங்கள் செய்தது கடினமாக இருந்தது. நினைத்ததை போல் ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் ஒரு பவுலராக நானும் அப்படிதான் செயல்பட வேண்டும் என்று புரிந்து கொண்டேன். ஸ்லோயர் பந்துகளில் பிட்சில் நன்றாக நின்று வந்ததோடு, ரன்கள் சேர்க்கவும் கடினமாக இருந்தது. செட்டிலாகி இருந்த 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது.

எனது பார்வையில் சுனில் நரைன் வீழ்த்திய அந்த 2 விக்கெட்டுகள் தான் முக்கியமாக கருதுகிறேன். அதுதான் ஆர்சிபி அணியின் சரிவு தொடங்கவும் காரணமாக இருந்தது. நான் பவுலிங் மாற்றங்களை கணித்த போது, டெத் ஓவர்களில் எனக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அதனால் 19வது ஓவரை வீச அழைக்கப்படுவேன் என்று மனதளவில் தயாராக இருந்தேன்.

அதனால் கடைசி ஓவரை வீசும் ஸ்டார்க்கிற்கு கூடுதல் ரன்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆர்சிபி அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கை வேறு யாருக்கும் கொடுக்காமல் ஆடி கொண்டிருந்தார். அதனால் 6 பந்துகளையும் அவருக்கு வெவ்வேறு வேகத்தில் வீச வேண்டும் என்று திட்டமிட்டேன். அது சரியாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.