“ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் என்ற மரியாதையே கொடுக்கலை..” விளாசிய முன்னாள் வீரர் கவாஸ்கர்

“ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் என்ற மரியாதையே கொடுக்கலை..” விளாசிய முன்னாள் வீரர் கவாஸ்கர்

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற மரியாதையை வழங்கவில்லை என விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர்.

அதே ஆண்டு தான் அந்த அணியின் ஆலோசகராக இணைந்தார் கௌதம் கம்பீர். இவர்கள் இருவரது கூட்டணியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் கோப்பையையும் வென்றது. ஆனால், அந்த அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் கௌதம் கம்பீரைத்தான் அனைவரும் பாராட்டினார்கள்.

வெளியில் தான் இப்படி என்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக தங்கள் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைப்பது பற்றி அந்த அணி முன்பே எந்த முடிவும் எடுக்காமல் இருந்துள்ளது.

சரியாக ஏலத்துக்கு சில நாட்களுக்கு முன்பு தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அவரை தக்க வைப்பது பற்றி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடன் சரியான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தார்.

பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். அந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவரை தங்கள் அணியின் கேப்டனாகவும் அறிவித்தது. அவர் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தனிப்பட்ட முறையில் ஒரு பேட்ஸ்மேனாகவும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்.

இதுவரை இரண்டு போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார். மேலும், அந்த இரண்டு போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடந்து கொண்ட விதத்தை விமர்சித்து இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

இது குறித்து கவாஸ்கர் பேசுகையில், “ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆவார். ஆனால் அவருக்கு அதற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என நான் நினைக்கிறேன். அவரின் கேப்டன்சி ரெக்கார்டு மிகவும் ஈர்க்கத்தக்க வகையில் உள்ளது” என்றார்.

2025 ஐபிஎல் தொடருக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயரை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு அஜிங்க்யா ரஹானே தலைமையில் விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மேலும், இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்ததால் மோசமான நெட் ரன்ரேட்டையும் பெற்று லீக் சுற்றின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Previous articleவிராட் கோலி ஏன் டி20 போட்டிகளில் தடுமாறுகிறார்? ஆர்சிபி அணிக்கு தேவையில்லாத சுமையா கோலி
Next articleஜாகிர் கான் சரமாரி புகார்.. LSG அணியில் வெடித்த சர்ச்சை.. லக்னோ தோல்விக்கு காரணம் இவர்தான்