ஹசரங்கவை ஐபிஎல் ஆர்சிபி அணியில் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியதற்கு என்ன காரணம் ? தலைமை பயிற்சியாளர் விளக்கம் !

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசன் 14 மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் சனிக்கிழமையன்று (21) ஒரு முக்கிய விடயத்தை தெளிவுபடுத்தினார்.

 அவுஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக இலங்கையின் வானிந்து ஹசரங்கவை இணைக்கும் முனைப்புக்கள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர்  கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) தலைமை பயிற்சியாளர் சைமன் கடிச் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் RCB அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ,இதனால் மைக் ஹெசன் இந்த பருவத்திற்கான தலைமை பயிற்சியாளர் கடமைகளை நிறைவேற்றவுள்ளதாக RCB அறிவித்துள்ளது.

தற்போது வகித்துவரும் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனர் (Director-Cricket Operations) பதவிக்கு மேலதிகமாக அவர் பயிற்சியாளராகவும்  செயலாற்றவுள்ளார்.

“ஒரு அணியாக ஆர்சிபி சீசனின் முதல் பாதியை நன்றாகத் தொடங்கியது. நாங்கள் நிறைய வேகத்தைப் பெற்றுள்ளோம், நிச்சயமாக மீதமான பருவத்திலும் அந்த முன்னேற்றத்தைத் தொடருவோம். நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம்” என்று மைக் ஹெசன் ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இலங்கை ஆல்-ரவுண்டர் வானிந்து ஹசரங்க இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்கான ஆர்சிபியில் பங்கேற்கிறார்.

ஹசரங்க சமீபத்தில் முடிவடைந்த இலங்கை-இந்தியா டி 20 தொடரின் தொடர் ஆட்டக்காரர், 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை 5.58 என்ற பெறுதியில்  வீழ்த்தினார்.

 சமீப காலங்களில் அவரது வெற்றியில் நாங்கள் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை, அவர் அதை நீண்டகாலம் செய்து வருகிறார். அவருடைய திறமை எங்களுக்கு பிடித்திருக்கிறது. அவர் பல திறன் கொண்ட கிரிக்கெட் வீரர் என்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே அவர் எங்களுக்கு மேலதிகமாக பேட்டிங் செய்யும் திறனையும் வழங்குவார், இது எங்களுக்கு பல அற்புதமான நன்மைகளை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

“குமிழி நெறிமுறையின் அடிப்படையில் எங்களிடம் மிகவும் இறுக்கமான நெறிமுறை உள்ளது.  ஏழு நாள் தனிமைப்படுத்தல் தான் நாங்கள் வைத்துள்ளோம். ஒட்டுமொத்த ஹோட்டல் ஊழியர்கள், டிரைவர்கள் கொரோனாவுக்கு சோதிக்கப்படுகிறார்கள், எல்லோரும் Bio Bubble இன் ஒரு பகுதி எனவும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு இலங்கையரான துஷ்மந்த சமீரவும் பெங்களூர் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக இந்திய அணியுடனான போட்டிகளில் ஹசரங்க 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அள்ளி இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளியமையை அடுத்து, ஆர்சிபி அணி இவரை அணிக்குள் அழைக்க மேலதிகமான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதுமாத்திரமல்லாமல் சமீரவும் இந்திய அணியுடனான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஹசரங்க மற்றும் சமீர ஆகியோர் ஆர்சிபி அணியில் ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு பிரதானமான காரணம் எனவும் நினைவு கூர்ந்தார்.