ஹாட் ரிக் வெற்றி பெற்ற கொல்கத்தா..!

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.

128 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில் லலித் யாதவ் பந்தில் வெங்கடேஷ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ராகுல் திரிபாதி விக்கெட்டை ஆவேஷ் கான் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் சூழலுக்கு நல்ல ரன் ரேட்டில் இருந்தாலும், பவர் பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா. இதன்பிறகு, கில் மற்றும் நிதிஷ் ராணா விக்கெட்டை பாதுகாத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் 11-வது ஓவரில் தனது முதல் ஓவரை வீசிய ககிசோ ரபாடா முதல் 5 பந்துகளில் ரன்களைக் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். இந்த நெருக்கடியினால் கடைசி பந்தில் கில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கேப்டன் இயான் மார்கனை டக் அவுட் ஆக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் உயரத் தொடங்கியது.

இந்த நிலையில் லலித் யாதவ் வீசிய 14-வது ஓவரில் ராணா 2 சிக்ஸர்கள், தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி விளாச அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன. ஆனால், அடுத்த ஓவரிலேயே ஆவேஷ் கான் 2 ரன்கள் மட்டும் கொடுத்து கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தினார்.

எனினும், புதிதாகக் களமிறங்கிய சுனில் நரைன், ரபாடா வீசிய 16-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், 1 பவுண்டரி பறக்கவிட 21 ரன்கள் கிடைத்தன.

கடைசி 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

எனினும் அடுத்த 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து நரைன் (10 பந்துகள் 21 ரன்கள்) மற்றும் டிம் சௌதி விக்கெட்டை இழந்தது கொல்கத்தா. ஆனால், ராணா கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.

18.2 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

#ABDH