♦இலங்கை கிரிக்கெட்டின் பாரதூரமான, கசப்பான சில பக்கங்கள்…!

♦இலங்கை கிரிக்கெட்டின் பாரதூரமான, கசப்பான சில பக்கங்கள்.

இலங்கைக் கிரிக்கெட்டின் பாரதூரமானதும் கசப்பானதுமான சில பக்கங்களை எழுதாமல், அது முழுமை பெறாது.

கிரிக்கெட் காலனித்துவ காலத்தில் அறிமுகமான விளையாட்டு. காலனித்துவத்தின் நீட்சியும் நிழலும் அதிலுண்டு.

அதேபோல, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் இனவாத நிகழ்ச்சி நிரல், கிரிக்கெட்டையும் ஆட்டிப் படைக்கத் தவறவில்லை. பொதுவாக விளையாட்டுத் துறை இப்படித்தான் இருக்கிறது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில், வடக்குக் கிழக்கைச் சேர்ந்த ஒருவரால் கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பது, அப்பட்டமான இன ஒதுக்கலேயன்றி வேறென்ன?

கிரிக்கெட்டில் பிரகாசித்த தமிழரையோ, முஸ்லிம்களையோ, மலையகத் தமிழரையோ பட்டியலிட்டால் வெகு சொற்பமே.

ஒரு காலத்தில் உவைஸுல் கர்ணி பந்து வீச்சாளராக இருந்தார். முத்தையா முரளீதரன், ரஸல் ஆர்னல்ட், நவீட் நவாஸ், ஏஞ்சலோ மத்தியூஸ், ஜெஹான் முபாரக், பர்வீஸ் மஹ்றூப்… இப்படி விரல் விட்டு எண்ணி விடலாம்.

கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த முத்தையா முரளீதரனால், இலங்கை அணியின் உப தலைவராக மட்டுமே ஆக முடிந்தது. அவரை கெப்டனாக நியமிக்கக் கூட, இங்குள்ள பேரினவாத மன அமைப்பு இடம் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அஸாருதீன் இந்திய அணித் தலைவராக இருந்தார். அதனை இங்கு நினைவூட்டுவது அவசியம்.

தேசிய அணியில் இடம்பிடித்த ரொஷான் ஜுராங்பதி மலே முஸ்லிம். அவரும் காணாமல் போனார். திலகமான இன்னொருவர் நன்கு பிரகாசித்தார். பின்னர் அவர் மத அடையாளத்தைக் கைவிட்டதாகவும், தன்னைப் பெரும்பான்மை ஆளாக காட்ட முற்பட்டதாகவும் கதைகள் உண்டு.

உள்ளூர் கிரிக்கெட், பெரிதும் மேல் மாகாணம் சார்ந்ததாகவே உள்ளது. தமிழ் யூனியன், மலே கிரிக்கெட் கழகம் போன்றவை, கொழும்பை மையமாகக் கொண்டியங்கினாலும், தேசிய கிரிக்கெட் அணியின் இனக் கட்டமைப்பிலோ இனச் சமநிலையிலோ பெரியளவு மாற்றங்கள் சாத்தியப்படவில்லை.

மாத்தறையிலிருந்து வந்த சனத்தும், காலியில் இருந்து வந்த களுவும், கண்டியில் இருந்து வந்த முரளீதரனும் சங்கக்காரவும் விதிவிலக்குத்தான். இங்கு கிரிக்கெட்டில் மேல் மாகாணத்தின் செல்வாக்குதான் மிக அதிகம். அலசிப் பார்த்தால் பிராந்தியப் பாகுபாடு உள்ளதை நன்குணர முடியும்.

நாட்டில் பரவலாகவும் – குறிப்பாக வடக்கு கிழக்கிலும் – கிரிக்கெட் பயிற்சிகளுக்கோ தேர்வுக்கோ வாய்ப்புகள் மிகவும் குறைவு.

எங்களது பிரதேசத்தை எடுத்துக் கொண்டால்- அக்கரைப்பற்றைச் சேர்ந்த மக்பூல் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்துவீச்சாளக மிளிர்ந்தார். நிந்தவூர் சவாஹிரின் அதிரடி ஆட்டம் பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யமானது. திருக்கோவிலில் கூட மிகச்சிறந்த பிளேயர்கள் இருந்தார்கள். இவர்களெல்லாம் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கக் கூடியளவு திறமை கொண்டவர்கள்.

இப்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்பதே இங்குள்ள கசப்பான வரலாறாகும்.

சமவாய்ப்பில்லாத (lack of equal opportunity), பாரபட்சம் நிலவும் துறையாகவே கிரிக்கெட் தொடர்ந்தும் நீடிக்கிறது. இதை சீரியஸாக மாற்றியமைக்க யாரும் தயாரில்லை.

இன விகிதாசாரப்படி பார்த்தால் கூட, 25% உள்ள எண்ணிக்கைச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் போதாது. 11 பேர் கொண்ட அணியில் 2-3 பேராவது இடம்பெற வேண்டும். திறமை அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. தெரிவுக்குழு விரிந்த பார்வையோடு இயங்குவதில்லை.

பாரியளவு பணம் சம்பாதிக்கும் வணிகர்களின் பிடியில் கிரிக்கெட் அகப்பட்டிருக்கிறது. குறிப்பாக IPL பணத்தைக் குறியாக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. இங்கும் LPL என்று தொடங்கினார்கள். அதில் கூட, மருந்துக்கும் சிறுபான்மையினருக்கு இடமளிக்கப்படவில்லை.

பாடசாலை கிரிக்கெட்டில் கூட, எல்லா இலங்கையரையும் இணைக்கும் பார்வையோ வேலைத்திட்டமோ கிடையாது.

இலங்கை கிரிக்கெட் சபை, ஊழல் குற்றச்சாட்டுகளால் நிறைந்து கிடக்கிறது. இதிலிருக்கும் மோசமான அரசியல் தலையீட்டால், கிரிக்கெட் துறையே சீரழிந்து போய்விட்டது.

இப்படி இலங்கைக் கிரிக்கெட்டுக்கு கசப்பான சில பக்கங்கள் உண்டு.

இலங்கையர்களுள் ஒரு தொகையினர்,
இந்தியாவினதும் பாகிஸ்தானினதும் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது ஏன் என்று தேடினால், தனிப்பட்ட ரசனைத் தெரிவு முதல், இவைபோன்ற அரசியல் காரணிகள் வரை பலவகையான பதில்கள் கிடைக்கும்.

சிராஜ் மஷ்ஹூர்
13.09.2022

எமது YouTube தளத்துக்கு பிரிவேசியுங்கள் ?