மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை!
எட்டு அணிகள் பங்குபெறும் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் மார்ச்-4ல் துவங்கி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெஸ்ட் இன்டிஸ், இந்திய அணியை வைத்துச் சில விசயங்கள் பார்ப்போம்.
இதில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளாக கணிக்கப்படுவதில் ஆஸியும் இங்கிலாந்தும் முன்னணியில் வருகின்றன. அடுத்த மூன்றாவது அணியாய் உலகக்கோப்பையை நடத்தும் நியூசிலாந்து வருகிறது. நாலாவது அணிக்கான இடத்திற்கு, அதிகபட்ச வாய்ப்பில் இந்தியாவும், அதற்கடுத்த இடங்களில் வெஸ்இண்டிசும் செளத் ஆப்பிரிக்காவும் வருகின்றன. பாகிஸ்தானும், பங்களாதேசும் இந்த முறை பார்வையாளர்கள் போல்தான்.
இந்த நிலையில், இந்த மகளிர் உலகக்கோப்பையை மிக சுவாரசியானமான ஒன்றாய், அரையிறுதிக்கான அணிகளென கணிக்கப்பட்டதிற்கு வெளியே இருந்த வெஸ்ட் இன்டிஸ் அணி மாற்றியிருக்கிறது. எப்படியென்றால், அரையிறுதிக்கான உறுதியான நம்பிக்கையைத் தந்த இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்திலும், அதற்கு முன்பு அரையிறுதிக்கான மூன்றாவது அணியாய் கருதப்படும் நியூசியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால்!
இதனால் ஆஸி-இங்கி-நியூசி-இந்தியா என்ற அரையிறுதி அணிகளுக்கான கணிப்பில் ஓட்டையைப் போட்டியிருக்கிறது வெஸ்ட் இன்டிஸ். தற்போது பலகீனமான பாகிஸ்தான், பங்களாதேஷை வென்றாலே அரையிறுதியில் இருப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகிவிடும். இதனால் வெளியேறப்போகும் அந்த அணி யாரென்பதுதான் இந்த மகளிர் உலகக்கோப்பையின் சுவாரசியமே!
இந்தியா பாகிஸ்தானை 100+ ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நல்ல ரன்ரேட்டில் இருக்கிறது. வெஸ்ட்இன்டிஸ் உடன் தோற்ற நியூசி, இங்கிலாந்தை இந்திய அணி வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இதில் ஆஸி, வெஸ்ட்இன்டிஸ் உடன் தோற்ற இங்கிலாந்தை வென்றால் ஏறக்குறைய அரையிறுதிதான். வெஸ்ட்இன்டிஸ் உடன் மட்டும் தோற்ற நியூசியை வெல்வதும் முக்கியம். அடுத்த போட்டியாய் இன்று நியூசி உடன்தான் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இரசிகர்களுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமானது.
இதேவேளையில் வெஸ்ட் இன்டிஸ் ஆஸிக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தால் ஆஸி-நியூசி-இங்கி-இந்தியா என நான்கு அணிகளுமே மூன்று இடங்களுக்காய் சமஅளவில் அடித்துக்கொள்ளும் சூழல் உருவாகிவிடும்.
செளத்ஆப்பிரிக்கா அணியைப் பார்க்கும் போது அவர்கள் ஆஸி-நியூசி இங்கி-இந்தியா அணிகளுக்குச் சவால் தருபவர்களாகத் தெரியவில்லை. ஆனால் இந்த நான்கு அணிகளில் அவர்கள் யாருக்காவது அதிர்ச்சியைத் தந்தால் அந்த அணி போட்டியிலிருந்து மூட்டையைக் கட்ட வேண்டியதுதான். பாகிஸ்தான், பங்களாதேஷ் அதிர்ச்சி தரும் இடத்தில் இல்லை.
தற்போது நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரை 4-1 என்று இழந்த இந்திய அணியில் மிடில் ஆர்டர் குறைந்தது 30 ஓவர்கள் ஆடுவது அரையிறுக்கான வாய்ப்பை அதிகமாக்கும்!
Richards