அதே பிட்சையே பயன்படுத்துங்கள்- விவியன் ரிச்சர்ட்ஸ் ஏன் இப்படி சொல்கின்றார் ?

கடந்த டெஸ்ட் போட்டியில் உபயோகிக்கப்பட்ட அதேபோன்ற பிட்சை கடைசிப் போட்டிக்கும் பயன்படுத்த வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது.

அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பல மைதானங்களில் பவுன்சர்களிலும், ஸ்விங் பந்துகளிலும் பேட்ஸ்மேன்கள் ஒருகாலத்தில் கஷ்டப்பட்டார்கள். பின்பு அதுபோன்ற பந்துவீச்சுக்கும் பிட்சுக்கும் பழகி இப்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் தைரியமாக வேகப்பந்தை எதிர்கொள்கிறார்கள்.

துடுப்பாட்ட வீரர்களின் திறனை சோதிப்பதால்தான் இதற்கு டெஸ்ட் மேட்ச் என பெயர் வைக்கப்பட்டது. அதை பலரும் மறந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

நீங்கள் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்ப தயாராக வேண்டும். ஏனென்றால் இந்தியா சுழற்பந்துவீச்சின் தாயகம். அங்கிருக்கும் பிட்ச் அதற்கு சாதகமாகத்தான் இருக்கும்.

இப்போது உட்கார்ந்து அழுவது, புகார் கூறுவதெல்லாம் சரியான அணுகுமுறை இல்லை. இந்தியா மிகச்சிறப்பாக பயன்படுத்தி விளையாடுகிறது. அதனை நான் ரசிக்கிறேன் என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

என்னைப் பொறுத்தவரை அடுத்தப் போட்டிக்கும் இதேபோல இருக்கும் பிட்சை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் கதறல்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.