“அப்போ சிஎஸ்கே பேட்டிங்கை பார்த்து பயந்தார்கள் ஆனால்..” கிழித்துத் தொங்கவிட்ட அம்பத்தி ராயுடு

“அப்போ சிஎஸ்கே பேட்டிங்கை பார்த்து பயந்தார்கள் ஆனால்..” கிழித்துத் தொங்கவிட்ட அம்பத்தி ராயுடு

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமான நிலையில் உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி அவற்றில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே மோசமாக ஆடியது. சிஎஸ்கேவின் இந்த மோசமான செயல்பாட்டுக்குக் காரணம் அந்த அணியின் பேட்டிங் தான்.

இதை அடுத்து முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடு கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார். முந்தைய காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கை பார்த்து எதிரணிகள் பயந்தார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணியின் பேட்டிங் நிலையாக அமையவில்லை. பேட்டிங் சரியில்லை என்பதால் அணியில் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் சிஎஸ்கே அணி இதுவரை ஒரு போட்டியில் கூட பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பவர் பிளேயில் சிஎஸ்கே அணி 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து ஏழாவது ஓவர் முதல் 14 வது ஓவர் வரை டெஸ்ட் போட்டி போல பவுண்டரி அடிக்காமல் சிங்கிள் ரன்களாகவே எடுத்து 55 ரன்கள் மட்டுமே சேர்த்தது சிஎஸ்கே. அதன் பின்னர் கடைசி ஆறு ஓவர்களில் மட்டும் அதிரடி ஆட்டம் ஆடியது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே அரை சதம் அடித்திருந்தனர். ஆனால் சிஎஸ்கேவின் பேட்டிங் அதிருப்தி அளிப்பதாகவே இருந்தது.

ஒவ்வொரு ஓவரிலும் ஒன்று அல்லது இரண்டு பவுண்டரி சிக்ஸர்களை அடிக்க வேண்டும் என்ற நோக்கம் சிஎஸ்கேவிடம் இல்லை. மற்ற அணிகள் எல்லாம் விக்கெட் போனாலும் சரி என அதிரடியாகவே ஆடுகிறார்கள். அதனால் 200 ரன்களை மற்ற அணிகள் பல போட்டிகளில் எட்டி வருகின்றன. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 177 ரன்கள் இலக்கை 15.4 ஓவர்களிலேயே எட்டியது.

அதன் பிறகு முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடு சிஎஸ்கே பேட்டிங் பற்றி பேசுகையில், “இது மிகவும் சராசரிக்கும் கீழான பேட்டிங். மிடில் ஓவர்களில் ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கமே இல்லை. டி20 போட்டிகளில் இனியும் இப்படி விளையாடக் கூடாது. ஒரு சிங்கிளை எடுத்துவிட்டு அடுத்த பந்து எளிதாக வருமா எனக் காத்திருக்கிறார்கள். இப்படி விளையாட முடியாது.”

“அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்ற நோக்கம் இருந்ததாகவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கை பார்த்து மற்ற அணிகள் பயந்தார்கள். ஏனெனில் அப்போது அதிக நோக்கத்துடன் சிஎஸ்கே அணி விளையாடியது. அடுத்து வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி நிச்சயம் முன்னேற வேண்டும். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டு வரும் என எனக்குத் தோன்றவில்லை” என்றார்.

Previous article17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடியதை கண்டித்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்?