பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்று (11) இலங்கை அணி தொடரை (2-0) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கண்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இப்ராஹிம் சத்ரன் மற்றும் ரஹ்மத் ஷா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்களின் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க, சத்ரன் 54 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹ்மத் 63 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
128 ரன்களில் இரண்டாவது விக்கெட் சரிந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் கடைசி 9 விக்கெட்டுகளை 25 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி 8 விக்கெட்டுகள் 10 ரன்களுக்குள் வீழ்ந்தன.
இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 10 ரன்களைக் கடக்கவில்லை.
பந்துவீச்சில் வனிது ஹசரங்க 27 க்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவர, அசித்த பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது.
சாரித் 74 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். குசல் மெண்டிஸ் 61 , சதீர சமரவிக்ரம 52 , ஜனித் லியனகே 50 பெற்றனர்.