ஆப்கானிஸ்தான் செய்த தவறு என்ன ?

ஒரு தவறு சரியான நேரத்தில் சரியாக மாறியது!

ஆட்டத்தை துவங்க முடிந்த இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்களை அணிகள் வைத்துக்கொண்டு, இரண்டு வலதுகை பேட்ஸ்மேன்களை ஆட்டத்தை துவக்க இலங்கை அணி நிர்வாகம் அனுப்பி வைத்து ஒரு தவறை பேட்டிங் வரிசையில் செய்திருந்தது!

அந்தத் தவறுதான் இன்று இலங்கை அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. மிஸ்டரி ஸ்பின்னர் என்ற அடிப்படையில் கூகுளி முறையில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை உள்ளே கொண்டுவரும் முஜிபூர் ரகுமான் பந்துவீச்சை, இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வலது கை பேட்ஸ்மேன்கள் எளிதாய் சமாளித்து ஐந்து ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாட, அது ஆப்கானிஸ்தான் அணிக்கு நெருக்கடியாக மாறி, பவர் பிளே வின் கடைசி ஓவருக்கு, ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆட்டத்தின் மத்தியில் பந்து வீச்சில் துருப்புச் சீட்டாக இருக்கும் ரசித் கானை அழைத்து வருகிறது. அதுதான் அவரை அந்த ஓவரில் 17 ரன்களை கொடுக்க வைக்கிறது!

இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களிடம் ஆப்கானிஸ்தான் அணியின் சில குறிப்பிட்ட பவுலர்களை மட்டும் தாக்கும் திட்டம் எதுவும் கிடையாது. அவர்களின் திட்டம் எல்லோரையும் அடிப்பது. அதைத்தான் செய்தார்கள் அதற்கு நல்ல முடிவும் கிடைத்திருக்கிறது. ஆனால் துவக்க ஆட்டக்காரர்கள் பவர் பிளேவில் விக்கெட்டை தராமல் இருந்ததுதான் இந்தத் திட்டத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. இல்லையென்றால் ரசித் கான் முன்கூட்டியே வந்திருக்க மாட்டார்.

இலங்கை அணியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடும் கதாபாத்திரம் ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வழங்குவது எளிது செயல்படுத்துவது கடினம். ஆனால் அவர் அலட்டிக்கொள்ளாமல் அதை செய்து முடித்து விட்டுப் போய்விட்டார்.

ஆப்கானிஸ்தான் அணியின் மேல் பெரிதாக எந்த தவறையும் கூற முடியாது. அவர்கள் பேட்டிங் வரிசையில் ஒரு சிறிய தவறு செய்தார்கள். முகமது நபி வந்த இடத்தில் ரசித் கானை அனுப்பியிருக்க வேண்டும். அவரிடம்தான் டி20 கிரிக்கெட் வடிவதற்கான சில வித்தியாசமான ஷாட்கள் இருக்கிறது. நபி அப்படிப்பட்ட பேட்ஸ்மேன் கிடையாது. இதில் ஏற்பட்ட ஒரு சிறிய தவறு ஒரு ஆறு முதல் எட்டு பந்துகளை வீணடித்து விட்டது.

இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் உள்ள வேறுபாடு ரஷீத் கான் மட்டும்தான். மற்றபடி இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை விட எல்லா விதத்திலும் பெரிய அணி. அதை இலங்கை அணி நிரூபித்திருக்கிறது!

Richards

எமது YouTube தளத்துக்கு செல்ல ?