ஆரம்பிக்கிறது ஒலிம்பிக் திருவிழா- இலங்கை சார்பில் 9 போட்டியாளர்கள், இந்தியா சார்பில் 228 …!

நாளை ஆரம்பிக்கிறது ஒலிம்பிக் திருவிழா- இலங்கை சார்பில் 9 போட்டியாளர்கள், இந்தியா சார்பில் 228 …!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுப் நிகழ்வு என்றால் ஒலிம்பிக்தான். கோரோனா பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி, இன்று டோக்கியோவில் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். 33 விளையாட்டுகளுக்கு 339 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

நாளை (23) மிகப் பிரம்மாண்டமாகவும் அதிக நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாவும் இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் வயது சுமார் 2,800 ஆண்டுகள்!

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை விளையாடப்பட்டு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியா என்கிற இடத்தில் ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இசை, சொற்பொழிவு, நாடகம் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மட்டுமே போட்டிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்குணமிக்க வீரர்கள் பங்கேற்க ஆரம்பித்த பிறகு, விளையாட்டுகளில் சுவாரசியம் கூடியது. 18ஆம் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஓட்டம், ஈட்டி எறிதல், குதித்தல் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.

20ஆம் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை சேர்க்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல விளையாட்டுப் போட்டிகளின் எண்ணிக்கையும் விரிவடைந்து கொண்டே இருந்தன. 37ஆம் ஒலிம்பிக் போட்டி ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமானியர்கள் கைப்பற்றிய பிறகு, வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் வரலாற்றாளருமான பியர் டி கூபெர்டின், உடற்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அப்போதுதான் ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்தும் எண்ணம் உருவானது. ‘போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல; எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம்’ என்கிற நோக்கத்தை முன்வைத்து, கூபெர்டின் முயற்சியில் 1896ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமானது. 13 நாடுகளைச் சேர்ந்த 280 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். 60 ஆயிரம் பேர் பார்த்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் அதிகமானார்கள். நாடுகளிடையே பதக்கம் பெறுவதில் போட்டிகளும் அதிகரித்தன.

1900ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 சதவீதம் ஆண்களும் 49 சதவீதம் பெண்களும் பங்கேற்கிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.

1924ஆம் ஆண்டு முதல் பனிப்பகுதியில் விளையாடக்கூடிய விளையாட்டுகளுக்காக ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நடத்தப் படுகின்றன. கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.

18 வது தடவையாக ஒலிம்பிக்கில் இலங்கை பங்கேற்கின்றது, இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள் இம்முறை பங்கேற்கின்றனர்.

1948 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 400 M தடைதாண்டல் போட்டிகளில் டங்கன் வைட் தடகளப்போட்டிகளில் இலங்கைக்கு முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் பெற்றார்,

2000 ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் சுசந்திக்கா ஜெயசிங்க 400 M ஓட்டப்பந்தயத்தில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் வென்றார்,
இதுவரை ஒட்டுமொத்தமாக 136 வீர,வீராங்கனைகள் மொத்தமாக இலங்கை சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர், அதிகபட்சமாக 2000 ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

2016 பிரேசில் ரியோ டே ஜினீரோவில் இறுதியாக இடம்பெற்ற 31 வது ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி,38 வெண்கலம் அடங்கலாக 121 மொத்த பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது.

பிரித்தானியா 27 தங்கம், 23 வெள்ளி,17 வெண்கலம் அடங்கலாக 67 மொத்த பதக்கங்கள் பெற்று 2 ம் இடத்தைப் பெற்றது. 26 தங்க பதக்கங்களுடன் சீன 3 ம் இடம் பிடித்தது.

54 நாடுகள் குறைந்தது ஒரு தங்கத்தையாவது பெற்றுக்கொண்டன,

33 வகையான போட்டி வகைகளில் 339 போட்டிகள் நடத்தப்படவுள்ளது, 11,238 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இம்முறையை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் 18 வகையான போட்டிகளில் 228 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர் .இதிலே 119 தடகளப் போட்டியாளர்களாவர்.
கொரோனாவை வெற்றிகொண்டு வருகின்ற ஆகஸ்ட் 8 ம் திகதிவரை ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற நாமும் பிரார்த்திப்போம்.