ஆர்சிபி ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. சோகமான ரசிகர்கள்.. 2 ஓவரில் கதையை மாற்றிய ஜோஷ் ஹேசில்வுட்

 

ஆர்சிபி ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. சோகமான ரசிகர்கள்.. 2 ஓவரில் கதையை மாற்றிய ஜோஷ் ஹேசில்வுட்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு வெறும் 17 சதவீதமாகச் சரிந்த சூழ்நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 19வது ஓவர் ஆட்டத்தையே மாற்றி, வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய இரண்டு ஓவர்கள் ஆட்டத்தை மாற்றியது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி 42 பந்துகளில் 70 ரன்களும், தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் அடித்து மிரட்டலான துவக்கத்தை அளித்தார். அதன் பின் விக்கெட்டுகள் விழுந்தாலும் அந்த அணி நல்ல ரன் ரேட்டை தக்க வைத்து ஆடியது. 16 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது ராஜஸ்தான்.

அதிரடியாக ஆடக்கூடிய ஷிம்ரன் ஹெட்மையர் மற்றும் துருவ் ஜூரெல் களத்தில் இருந்தனர். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு 47.5 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு ஜோஷ் ஹேசில்வுட் 17வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஷிம்ரன் ஹெட்மையர் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். மேலும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அடுத்து 18வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். அது மிகவும் மோசமான ஓவராக அமைந்தது. அந்த ஓவரில் அவர் 22 ரன்களை வாரி இறைத்தார். இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு 17 சதவீதமாக சரிந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

எப்படியும் அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்றே பலரும் நினைத்தனர். பெங்களூர் அணியின் ரசிகர்கள் சோகமாக இருந்தனர். ஆனால், 19வது ஓவரை வீசிய ஜோஷ் ஹேசில்வுட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த அவர், மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் துருவ் ஜூரெல் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை அடுத்து கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குச் சென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு 65 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் கடைசி ஓவரில் யாஷ் தயாள் சிறப்பாக பந்துவீசி 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜோஷ் ஹேசில்வுட் தான் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் தனது முதல் இரண்டு ஓவர்களில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்தார். ஆனால். கடைசி இரண்டு ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Previous articleசேப்பாக்கத்தில் வரலாறு.. தோனி மாபெரும் மைல்கல் சாதனை.. டி20 போட்டிகளில் புதிய சாதனை
Next articleசின்னப் பையனுக்கு கூட அந்த அறிவு இருக்கு.. ராஜஸ்தான் வீரரால் இஷான் கிஷனை வெளுக்கும் ரசிகர்கள்!