ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு போகாத ஷமி டெஸ்ட் டீமுக்கு தேவையே இல்லை.. பிசிசிஐ வட்டாரத்தில் புகைச்சல்
இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அவரால் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பந்துவீச முடியாது என்ற காரணத்தால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், ஷமியின் டெஸ்ட் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக பிசிசிஐ வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. முகமது ஷமிக்கு தற்போது 34 வயது ஆகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த வயதை எட்டினால் அடிக்கடி காயத்தில் சிக்குவது வழக்கம் தான். ஆனால், முகமது ஷமி கடந்த மூன்று ஆண்டுகளாகவே பல மாதங்களை காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு செலவிட்டு இருக்கிறார்.
இந்திய அணிக்காக 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் விளையாடிய அவர், அதன் பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு சில வாரங்கள் முன்புதான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். அந்த இரண்டு முக்கியமான தொடர்களிலும் முகமது ஷமியின் செயல்பாடு அசாத்தியமாக இருந்தது. அவர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவர் சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியிலும் முகமது ஷமி இடம் பெறவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியிலும் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்னதாக முகமது ஷமியை பரிசோதித்த பிசிசிஐ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவினர், அவரால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் 15 முதல் 20 ஓவர்களை வீச முடியாது, அதற்கான உடல் தகுதி அவரிடம் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர். இந்தியாவின் டெஸ்ட் தொடர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் முக்கியமானதாக உள்ளது.
ஏனெனில், இந்திய மண்ணில் இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் ரஞ்சி டிராபி விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இந்திய மண்ணில் மற்ற அணிகளை வீழ்த்தி விட முடியும். ஆனால், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் அப்படி இல்லை. அனுபவம் நிறைந்த வேகப் பந்துவீச்சாளர்களால் மட்டுமே அங்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தற்சமயம் பும்ரா, ஷமி மட்டுமே அத்தகைய அனுபவம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முக்கியமான நாடுகளுக்கு முகமது ஷமியால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
ஏனெனில், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஷமி அல்லாத வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் தான் விளையாடப் போகிறார்கள் என்றால், அவர்களுக்கு அனுபவம் அவசியம். ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா போன்ற மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளிலும் வாய்ப்பு அளித்தால்தான் அவர்களுக்கு போதிய அனுபவம் கிடைக்கும். இதை மனதில் வைத்து முகமது ஷமியின் டெஸ்ட் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக பிசிசிஐ வட்டாரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. இனி இந்தியத் தேர்வுக் குழு டெஸ்ட் அணியில் ஷமியை தேர்வு செய்வது மிகவும் கடினமே.