இங்கிலாந்து அணிக்கு முதல் அடி.. கைவிடப்பட்ட போட்டி.. சூப்பர் 8 செல்வதில் சிக்கல்

இங்கிலாந்து அணிக்கு முதல் அடி.. கைவிடப்பட்ட போட்டி.. சூப்பர் 8 செல்வதில் சிக்கல்

2022 டி20 உலகக் கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்துக்கு, 2024 உலகக் கோப்பை தொடரின் துவக்கத்திலேயே பெருத்த அடி விழுந்துள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி சிக்கலில் உள்ளது.

2024 டி20 உலக கோப்பை தொடரின் ஆறாவது போட்டியில் குரூப் “பி” யில் இடம் பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் சற்று தாமதமாகவே துவங்கியது. முதலில் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. ஆறு ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில் ஏழாவது ஓவரின் இடையே மழை மீண்டும் குறுக்கிட்டது.

சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது. அப்போது போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் அதிரடி ஆட்டம் ஆடிய ஸ்காட்லாந்து அணி 10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது. அந்த அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் ஆடி இருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் மைக்கேல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 45 ரன்களும், ஜார்ஜ் முன்சே 31 பந்துகளில் 41 ரன்களும் குவித்து இருந்தனர்.

இதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு டி எல் எஸ் விதிப்படி 109 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 10 ஓவர்களில் இந்த இலக்கை எட்டும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததாலும், அப்போது அதிகபட்ச போட்டி நேரத்தை கடந்து விட்டதாலும் போட்டி கைவிடப்பட்டது.

அதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குரூப்பில் ஐந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற நான்கு அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாட வேண்டும். தற்போது எளிதாக வெல்லக்கூடிய போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக மாறி இருக்கிறது. தற்போது இதே குரூப்பில் ஆஸ்திரேலியா, நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி அடுத்து விளையாட உள்ளது.

இந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தாங்கள் இடம் பெற்றுள்ள குரூப்பில் நிச்சயமாக முதல் இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறி விட முடியும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால், நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். அதே சமயம் ஸ்காட்லாந்து அணியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகளை வீழ்த்தி இருந்தால் நிலைமை மாறி விடும்.

அப்போது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளின் நெட் ரன் ரேட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது ஸ்காட்லாந்து அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் அந்த அணி இரண்டாம் இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலை ஏற்பட்டால் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். மழையின் காரணமாக இங்கிலாந்து அணிக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

 

 

Previous articleடி20 உலககோப்பை தொடருக்கான மொத்த பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி
Next articleவரலாறு படைத்த அமெரிக்கா! சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வி.. டி20 உலககோப்பையில் அபாரம்