இதான் ட்விஸ்ட்.. இந்திய அணியில் நண்பன் இடத்தை பிடிக்கப் போகும் இஷான் கிஷன்.. பிசிசிஐ முடிவு
பிசிசிஐ-யால் ஒதுக்கப்பட்டு இருக்கும் இஷான் கிஷன் தனது நண்பன் சுப்மன் கில் இடத்தை பிடித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இருக்கிறார். 2022 முதல் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வந்தார் இஷான் கிஷன். அவருக்கு பல தொடர்களில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படாத போதும், ஒவ்வொரு தொடரிலும் அவர் மாற்று விக்கெட் கீப்பராக, மாற்று பேட்ஸ்மேனாக இடம் பிடித்து வந்தார்.
அவர் மீது பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனாலும், தனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லை என்பதால் மனம் உடைந்து போய் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விலகி இந்தியாவுக்கு திரும்பினார் இஷான் கிஷன். அதன்பின் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.
ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் ஐபிஎல் தொடருக்கு தன்னை தயார் செய்து வந்தார். அதனால் பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்காமல் இருந்தது. தற்போது இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் தீவிரமாக விளையாடி வருகிறார். கடந்த மாதம் புச்சி பாபு டெஸ்ட் தொடரில் சதம் அடித்து இருந்தார் இஷான் கிஷன்.
தற்போது துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் அவர் இந்தியா சி அணிக்காக ஆடி சதம் அடித்து இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க உள்ளது. அவரது நண்பரான சுப்மன் கில் இந்திய டி20 அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் பங்கேற்க உள்ளார்.
அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. சமீபத்தில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு இருந்தார். அந்த வகையில் அவர் நிச்சயம் டி20 அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்திய அணி அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
அந்த முக்கியமான தொடர்களில் சுப்மன் கில் பங்கேற்க வேண்டும் என்பதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அதன் மூலம் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ மறு வாய்ப்பு அளிக்க உள்ளது.
சுப்மன் கில்லை பொறுத்தவரை அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சுமாராகவே பேட்டிங் செய்து வருகிறார். எனவே, அவர் ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துவதே சரியாக இருக்கும் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு டெஸ்ட் தொடரின் இடையே வரும் டி20 தொடரில் ஓய்வு அளிக்க முடிவு செய்து இருக்கிறது.