இதுதான் கன்சிஸ்டன்சி.. 10 சிக்ஸ், 5 பவுண்டரி.. 50 பந்துகளில் சதம் விளாசி சம்பவம் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்
விஜய் ஹசாரே தொடரில் கர்நாடகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 10 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 114 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். கர்நாடகா அணியின் இளம் பவுலரான வைஷாக் விஜய்குமார் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சதத்தை எட்டியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றிவிடப்பட்டார். அதன்பின் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றாலும், இந்திய ஒருநாள் அணிக்குள் மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் கவனம் செலுத்தி வந்தார்.
மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 5 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதம் உட்பட 452 ரன்களை விளாசினார். அதன்பின் சையத் முஷ்டாக் அலி தொடரிலும் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், 8 இன்னிங்ஸ்களில் விளையாடி சதம் உட்பட 345 ரன்களை விளாசினார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதாக பார்க்கப்பட்டது. சையத் முஷ்டாக் அலி தொடரை மும்பை அணிக்கு வென்று கொடுத்ததால், விஜய் ஹசாரே தொடருக்கும் அவரையே கேப்டனாக நியமனம் செய்தது. இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடரில் கர்நாடகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணி தரப்பில் ரகுவன்ஷி – ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரகுவன்ஷி 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஆயுஷ் மாத்ரே – ஹர்திக் தாமூர் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 82 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தார். கண் இமைக்கும் நேரத்தில் 32 பந்துகளில் அரைசதத்தை கடந்த ஸ்ரேயாஸ் ஐயர், வைஷாக் விஜய்குமார் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 50 பந்துகளில் சதத்தை விளாசி சாதனை படைத்தார்.
இன்னொரு பக்கம் சிவம் துபேவும் அதிரடியில் பொளந்து கட்ட, மும்பை அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 384 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 10 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 114 ரன்களையும், சிவம் துபே 36 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 63 ரன்களையும் விளாசி அசத்தினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.