இதுவும் கடந்து போகும் சௌத் ஆப்ரிக்கா….

கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கும் காலத்தில் தென்னாப்பிரிக்கா அணி கிடையாது.

சௌத் ஆப்ரிக்கா அணி கிரிக்கெட் உலகின் மூன்றாவது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாகும். ஆனால் அந்த நாட்டின் நிறவெறி பிரச்சினை காரணமாக சௌத் ஆப்ரிக்க அணிக்கு ஐசிசி தடை ஏற்படுத்தி இருந்தது. அதனாலேயே உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் போது சௌத் ஆப்ரிக்க அணி இல்லை. ஆனால் ஈஸ்ட் ஆப்ரிக்க அணி இருந்தது.

தடை ஏற்பட்டதால் தென்னாப்ரிக்காவில் பிறந்த வீரர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட மற்ற ஆடும் நாடுகளுக்கு குடிபெயர்ந்தும், சம்பளத்திற்கும் விளையாடினார். அதில் ஒருவர் கெப்ளர் வெஸ்ஸல்ஸ். அவர் 21 வயதில் சிட்னிக்கு சென்று அங்கு கிரிக்கெட் விளையாடி முதல் தர கிரிக்கெட்டை ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார். சௌத் ஆப்ரிக்காவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்து 91ல் சௌத் ஆப்ரிக்கா அணி உருவெடுத்த போது அதன் கேப்டனாக வெஸ்ஸல்ஸ் நாடு திரும்பினார். இரண்டு நாட்டுக்காக செஞ்சுரி அடித்த ஒரே வீரர் வெஸ்ஸல்ஸ்.

இப்படி நிறவெறிக்காக தடை ஏற்பட்டு “நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம்” என கறுப்பர்களும், வெள்ளயர்களும், இந்திய வம்சா வளியினரும் அணியில் “இணைந்து” ஒரு கோப்பை வென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. அணி ஒற்றுமையாக விளையாடினாலும் ஏனோ தென்னாப்ரிக்காவுக்கு வழக்கமாக சொல்லப்படும் கூற்று…அதிர்ஷ்டம் இல்லாத அணி.

இந்த டி20 உலகக்கோப்பையில் அந்த அணி தோற்று கேப்டன் மார்க்ரம் பேச்சை கேட்ட போது வருத்தமாக இருந்தது.

நாங்கள் கிரிக்கெட்டை டிவி ஷோரூம்களின் முன்னால் கால் கடுக்க நின்றுபார்த்துக்கொண்டிருந்த காலத்தில் அணிகளில் தென்னாப்ரிக்கா எப்போதுமே அட்டகாசமான அணி. பால் ஆடம்ஸின் தவளை போன்ற ஸ்பின் வீச்சு அதற்கு முன்னும் பின்னும் நாங்கள் கிரிக்கெட்டில் பார்க்க வில்லை. க்ளூஸ்னரின் குறி வைத்து எரியும் பௌலிங் புதுமை. உதட்டில் வெள்ளை பூச்சு பூசிக்கொண்டு ஜோக்கர் பட நாயகன் போல வரும் டொனால்டை கண்டு இந்திய கிரிக்கெட் விசிறிகளாக நாங்கள் நடுங்கியதுண்டு.

காற்றில் பறந்து கேட்ச் பிடிக்கும் ஜான்டி ரோட்ஸின் அற்புத ஃபீல்டிங்..அடடா..ஹன்ஸி க்ரோன்யேவின் அட்டகாச ஜேம்ஸ் பாண்ட் லுக். அசைக்க முடியாத ஓப்பனர்கள் கிர்ஸ்டன்ன்-கிப்ஸ்…ஜாக் கல்லிஸின் விரிந்த மார்போடு வீசும் பந்து வீச்சில் நிச்சயம் விக்கெட் விழும். ஏ.பி.டெவிலியரிஸின் டெவில் ஆட்டம் மறந்து விடுமா?

சௌத் ஆப்ரிக்கா எதிரணியாலும் மற்ற நாட்டினரால் நேசிக்கப்படக்காரணம் அதன் சிறப்பான ஆட்ட நேர்த்தியால் தான். நேற்று முன்தினம் ஃபைனல் பார்த்த போது க்ளாஸனின் ஒவ்வொரு அடியும் பார்த்த போது முதன் முதல் டிவியில் க்ரிக்கெட் பார்த்த போது மாக்கான் மாக்கானாக வந்த கிரஹாம் கூச், டேவிட் பூனின் ஸ்டைல் பார்க்க முடிந்தது. 87 வேல்ட் கப்பில் காட்டான்களாக வந்தனர் க்ரிக்கெட்டர்கள். 100 கிலோ, 90 கிலோ எடை கொண்டு பந்தை தட்டினாலே பறக்கும் அது ஒரு அழகான காலம்.

க்ளாஸன் அவுட் ஆனானோ அப்பாடா…என மூச்சு சீராக வந்தது. கடைசியில் சௌத் ஆப்ரிக்காவுக்கு கைக்கருகில் கோப்பை எட்டியும் அது கை நழுவி இந்தியாவுக்கு போனது மோசம்.

ஒரு உலகக்கோப்பையில் முதன்முதலாக நம் நாடு கோப்பை வென்ற மகிழ்ச்சியோடு எதிரணி தோல்விக்காக வருத்தப்பட்ட நிகழ்வும் கடந்தது.

காந்தியை முதன் முதலில் நிறத்தை சொல்லி ரயிலிலிருந்து இறக்கி விட்ட நாடு தானே என சரித்திரத்தில் நிகழ்வைத் தேடி மனதை சமாதானப்படுத்த வேண்டியதாகி விட்டது.

இதுவும் கடந்து போகும் சௌத் ஆப்ரிக்கா….

✍️ Selvan Anbu

Previous articleரோகித் சர்மாவை அதிகம் மிஸ் செய்வேன்.. கேப்டனாகவோ, பேட்ஸ்மேனாகவோ அல்ல.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Next article#ENGvWI 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.