இந்தியாவில் 2036 ஒலிம்பிக் தொடர்? சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு
2036 ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய அரசு சார்பில் சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி பேசி இருந்தார்.
இந்த நிலையில் 2036 ஒலிம்பிக் தொடரை இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய அரசு சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பல நாடுகளும் 2036 ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இவற்றுள் தகுதியான நாடு மற்றும் நகரத்தை தேர்வு செய்த பின்னர் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என தெரிய வரும். 2024 ஒலிம்பிக் தொடர் சில மாதங்களுக்கு முன்பு ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.
2028 ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற உள்ளது. 2032 ஒலிம்பிக் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. 2036 ஒலிம்பிக் தொடர் எங்கு நடத்தப்பட உள்ளது? என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
ஒலிம்பிக் தொடருக்கான ஏற்பாடுகளை மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் எப்போதும் அடுத்த மூன்று ஒலிம்பிக் தொடர்கள் எந்த நாட்டில், எந்த நகரத்தில் நடைபெற உள்ளது? என்ற முடிவு எடுக்கப்பட்டுவிடும். அதன் மூலம் ஒலிம்பிக் தொடரை நடத்த உள்ள நாடு அதற்கான நிதி திரட்டல் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க முடியும்.
அந்த வகையில் 2036 ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு மெக்சிகோ, இந்தோனேசியா, துருக்கி, இந்தியா, போலந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்து இருக்கின்றன. மேலும் சில நாடுகளும் விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. 2036 ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் அனுப்பிய நாடுகள் மற்றும் அந்த நாட்டில் எந்த நகரத்தில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு ஆய்வு செய்து முடிவை அறிவிக்கும்.