இந்தியாவுக்கு எதிராக இதை செய்தால், கண்டிப்பாக வெற்றி பெறலாம்.. வங்கதேச கேப்டன் நஜ்முல் பேச்சு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.இதற்கான வங்கதேச அணி வீரர்கள் இன்று டாக்காவில் இருந்து புறப்பட்டு இந்தியா வருகின்றனர்.
பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச அணி புதிய சாதனை படைத்தது. இதனால் இந்தியாவை வீழ்த்தும் நம்பிக்கையில் அந்த அணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹூசேன், இந்தியாவுக்கு எதிரான தொடர் கடும் சவால்களை கொடுக்கும் என்று கூறினார்.
இது குறித்து பேசிய அவர் பாகிஸ்தானை வீழ்த்தியதால் நாங்கள் கூடுதல் நம்பிக்கையுடன் இந்தியா தொடரில் களமிறங்கும் என்றும் அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடுமே தற்போது இந்தியாவை தாங்கள் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றது. எங்களுக்கு ஒவ்வொரு தொடருமே ஒரு வாய்ப்பாக தான் நாங்கள் கருதுகிறோம். இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம்.
ஆனால் அதற்கு முதலில் எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாக அமல்படுத்த வேண்டும். எங்களுடைய பணியை நாங்கள் சரியாக செய்தால் எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கும். டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த சில வருடங்களாக சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் முழு ஐந்து நாட்களையும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். அதுதான் எங்களுடைய முதல் திட்டம். கடைசி நாளில் கடைசி ஸ்சேஷன் வரை போட்டியை கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு மட்டும் எங்களால் செய்ய முடிந்தால் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். அதை நம்பிக்கையில் நாங்கள் விளையாடுவோம். அதே சமயம் இந்த தொடரில் என்ன நடக்கப் போகிறது என்று ரொம்பவும் யோசிக்காமல் விளையாட வேண்டும். எங்களுடைய பலத்தை நோக்கி நாங்கள் விளையாடுவது தான் இந்த தொடரில் மிகவும் முக்கியமான விஷயமாக கருதுகின்றேன்.
எங்களுடைய பந்துவீச்சு படையும் நன்றாக இருக்கிறது. எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் அனுபவம் குறைவானவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய சுழற் பந்துவீச்சு படை இந்தியாவுக்கு நிகரான அனுபவத்தை கொண்டு இருக்கிறது. எங்களுடைய பவுலர்கள் எந்த கால சூழ்நிலையிலும் பந்து வீசுவார்கள். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சாளர்கள், வேக பந்துவீச்சாளர்கள் அனைவரும் 100 சதவீதம் பங்களிப்பை களத்தில் கொடுப்பார்கள் என நம்புகிறேன்.
அதை செய்தால் நிச்சயமாக ஒரு அணியாக எங்களால் வெற்றி பெற முடியும் இந்த சுழற் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். என்னுடைய தனிப்பட்ட குறிக்கோள், அணி வெற்றி பெற வைக்க வேண்டும். எங்கள் அணியின் முக்கிய வீரரான சகிபுல் ஹசனும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன் கூறியுள்ளார்.