இந்தியா எங்கே தவறு செய்தது -திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என்ன ?

இந்த இந்திய அணியோடு இந்த வெற்றிக்கு இலங்கை அணி முழுத் தகுதியானது!

ரோகித் சர்மாவின் ஆன் பீல்ட் கேப்டன்சியில் எனக்கு முதன்முறையாக நியாயப்படுத்திப் பார்க்கமுடியாத ஒரு தவறு தெரிகிறது.

17ஆவது ஓவரை அர்ஸ்தீப் வீசிய பொழுது, அடுத்த 18வது ஓவரை புவனேஸ்வர் குமாரை வீச வைத்து, அதற்கடுத்த 19-வது ஓவரை மீண்டும் அர்ஸ்தீப்பை வீச வைத்து, ஹர்திக் பாண்டியாவை கடைசி ஓவருக்கு தள்ளி இருக்க வேண்டும். இது ஆட்டத்தை கடைசிவரை கொண்டு போவது. இல்லையென்றால் 18-வது ஓவரை ஹர்த்திக் வீசிய பொழுது, 19-வது ஓவரை அர்ஸ்தீப் இடம் தந்திருக்க வேண்டும். இது ஆட்டத்தை கடைசிவரை கொண்டு செல்லும்.

ஆனால் நான்கு ஓவர்களுக்கு 42 ரன்கள் இலக்கை வைத்துக்கொண்டு, 62 ரன்கள் இலக்கு இருக்கும்பொழுது செய்ய வேண்டியதை செய்துவிட்டார் கேப்டன் ரோகித் சர்மா. மேலும் புவனேஷ்வர் குமாரின் 19வது ஓவருக்கு பில்டிங் யுத்தி மாற்றப்பட்டு இருக்கவேண்டும். பந்து ஸ்டம்ப் லைனில் யார்க்கர், பிலாக் ஹோலில் வீசும்படி அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைட் யார்க்கருக்கு வியூகம் அமைத்து சிக்கிக்கொண்டார்கள்.

அடுத்து இந்த இந்திய அணி இந்த வருட CSK அணியாகும். பந்தில் ஸ்விங் இல்லாது போக, புவனேஸ்வர் குமாரோடு சேர்த்து பவர் பிளேவில் பந்துவீச ஆள் இல்லாத நிலைதான். இதுதான் இந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்கள் அடித்தும் தோல்வி அடைய வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது. அதனால் இந்திய ரசிகர்கள் பெரிய அளவில் இந்த தோல்வியால் கவலை அடைய வேண்டியதில்லை. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இன்ன பிற வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்குள் வரும்பொழுது இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும்.

இந்திய பேட்ஸ்மேன்கள் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்து, ஒரு ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை அடிக்கிறார்கள். இதுதான் தேவையான மிக முக்கியமான விஷயம்.

இது இல்லாமல் தான் இத்தனை நாளாய் உலக டி20 கிரிக்கெட்டில் பின் தங்கியிருந்தார்கள். இந்தப் பெரிய குறை தற்போது சரியாகி இருக்கிறது. பவர் பிளே வேகப்பந்து வீச்சு மிகச் சுலபமாக சரி செய்யப்படும்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஏறக்குறைய இறுதிப் போட்டிக்கான இடத்தை அடைந்து விட்டது என்றே சொல்லலாம். அவர்கள் முதல் போட்டியில் தோற்று அதற்கடுத்து மிகச் சிறப்பான கிரிக்கெட்டை காண தந்திருக்கிறார்கள்.

யாருடைய கணிப்பில் இல்லாது இந்த இடத்திற்கு வந்தவர்கள் கோப்பையையும் வெல்ல வாழ்த்துக்கள். மீண்டும் இலங்கை கிரிக்கெட் இப்படியான பெரிய வெற்றிகள் மூலம் மீண்டு வரட்டும்!

✍️ Richards