இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இல்லை.. விவிஎஸ் லக்ஷ்மனும் இல்லை.. புதிய நியமனம்
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணியுடன், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பயணிப்பார் எனச் செய்திகள் வெளியான நிலையில், ஆனால் அவர் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகச் செயல்பட மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் பிறகு இந்திய மூத்த அணியுடன் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த மூன்று பயிற்சிப் போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறும் வாய்ப்புள்ள வீரர்களைப் பரிசோதிக்க தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவு செய்திருக்கிறார். அதனால் அவர் இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்துக்கு முன்பாகவே பயணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், அவர் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகச் செயல்பட மாட்டார் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. ரிஷிகேஷ் கனித்கர் என்பவர் தான் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக இது போல இந்தியா ஏ அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக இருப்பவர்கள் பயிற்சியாளராக உடன் செல்வார்கள் அல்லது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் உதவிப் பயிற்சியாளர்கள் அந்த அணியுடன் பயணம் செய்வார்கள். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக விவிஎஸ் லக்ஷ்மன் இருக்கும் நிலையில், அவர் பயணித்திருக்கலாம். ஆனால் அவருக்கு பதிலாக ரிஷிகேஷ் கனித்கர் பயணிக்க உள்ளார்.
ஒருவேளை கௌதம் கம்பீருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்த ஆண்டு டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில், கௌதம் கம்பீருக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுக்காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் கௌதம் கம்பீர். எனவே, இந்தியா ஏ அணியில் அவர் சரியான வீரர்களைத் தேர்வு செய்வதற்கு அதிக முயற்சிகளை எடுப்பார் எனத் தெரிகிறது.