இந்திய அணியின் தேர்வு முறை -தவறுகள் எவை ?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அமைப்பதில், இடது கை பேட்ஸ்மேன்களை அணியில் வைப்பதில், ரவிந்திர ஜடேஜாவின் காயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியிருக்கிறது.

ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதில் அணிக்குள் வந்துள்ள அக்சர் படேலை, ரிஷப் பண்ட் இல்லாத அணியில் ஒரு நம்பிக்கையான பேட்ஸ்மேனாக இந்திய அணி நிர்வாகம் கருதவில்லை. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கிறது.

ஆசியக் கோப்பையில் ரிஷப் பண்ட்டை வெளியில் வைத்து, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் உடன் போனதுபோல் போகத்தான் இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. ரிஷப் பண்ட்டின் சீரற்ற டி20 பேட்டிங் இப்படியான முடிவிற்கு அவர்களைக் கொண்டு வந்தது. இந்திய டி20 அணியின் முதல் கீப்பராக அவர்களின் தேர்வு தினேஷ் கார்த்திக்காகத்தான் இருந்தார். ஆனால் இப்போது எல்லாம் மாறி இருக்கிறது.

ஜடேஜா அணியில் இருந்த காரணத்தால், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு இந்த ஆண்டு ஃபினிஷிங் ரோலில் மிகச் சிறப்பாக செயல்பட்ட, பகுதிநேர லெக் ஸ்பின்னர் ராகுல் திவாட்டியாவை இந்திய அணி நிர்வாகம் உள்ளே கொண்டுவராமல் விட்டது. இவரைத் தவிர பயன்படுத்திப் பார்க்க அவர்களிடம் வேறு இடது கை ஆல் ரவுண்டர் இல்லை. ஒரு இடதுகை பேட்ஸ்மேனை அணிக்குள் கொண்டு வரவேண்டுமென்றால் அப்படியும் யாரும் பெரிதாக இல்லை. 19 வயதான திலக் வர்மாதான் இருந்தார். ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆபத்துக்கு ரிஷப் பண்ட் கைவசம் இருக்க வேறு பக்கம் பார்வை போகவில்லை. அதே சமயத்தில் முழங்கால் காயத்தால் ஜடேஜா பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அக்சர் படேலை முன்னெச்சரிக்கையாக கொண்டுவந்து வைத்திருந்தார்கள்.

இந்த இடத்தில்தான் இஷான் கிஷனை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் பார்ப்பார்களா என்ற கேள்வி இருந்தது ஆனால் நம்பர் நான்கில் விளையாட ரிஷப், இஷான் இருவரும் ஒன்றுதான் என்கிற கணக்கில் அவரிடம் போகவில்லை. அணியில் முதலிலிருந்தே திட்டத்தில் இருந்த ரிஷப் பண்ட்டையே வைத்துக்கொண்டார்கள்.

அடுத்து 15 பேர் கொண்ட அணியில் இருக்கும் தீபக் ஹூடா, இதற்கு வெளியே ரிசர்வ் வீரராக இருக்கும் ஸ்ரேயாஸ் இவர்களின் இடத்திற்கும் இஷானை கொண்டு வரமுடியாது. ஏனென்றால் தீபக் மட்டுமல்லாது ஸ்ரேயாஸையும் பகுதிநேர ஸ்பின்னராக தேர்வுக்குழு பார்க்கிறது. அதனால் அவரை முதல் நான்கு இடங்களுக்கான மாற்று பேட்ஸ்மேன் என்று மட்டும் கருதாமல், பகுதிநேர பந்துவீச்சாளராகவும் பார்த்ததால், இஷானை மட்டுமல்ல சஞ்சுவையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு லெப்ட்ஹேண்டர் கூட இல்லாமல் அமைக்கப்படும் பிளேயிங் லெவன்தான் வலிமையாகத் தெரிகிறது. ஒரு லெக் ஸ்பின்னர், ஒரு லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் என்று அணிகள் திட்டமிடும் பொழுது, அதை இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் இருக்கும் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பெரிய மைதானங்களில் எப்படி அடித்து ரன் சேர்க்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாக இருக்கும்.

மேலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் இடம்பெற்றால், அவர் அன்-ஆர்த்தடாக்ஸ் ஷாட்களுக்கு போவதே நல்லது. ஏனென்றால் அவரால் நின்ற இடத்திலிருந்து விளையாடுவதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கிறது. இதுவே அவரை அன்-ஆர்த்தடாக்ஸ் ஷாட்களை நோக்கி நகர்த்தி இருக்கிறது. அவர் தன் பலவீனத்தை ஈடுகட்ட இதை ஒரு கருவியாக வைத்திருக்கிறார். அதனால் அவர் பவுண்டரி பிரஷர் இல்லாமல் ஆடவேண்டும் என்றால், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல்தான் ஆட வேண்டும். அவரைப் பற்றியும் யாரும் கவலைப்படக் கூடாது. அவர் விஷயத்தில் கடைசியாக எடுக்கப்படும் சிறந்த முடிவு இதுவாகத்தான் இருக்கும்.

ஸ்ரேயாஸ் கிரீஸில் இருந்து இறங்கி வெளியே திரும்பும் பந்துகளை ஆஃப் சைடு தூக்கி அடிக்கும் திறமையற்றவராக இருப்பதுதான், அவரை கிரீசுக்குள் இருந்து ஆப் ஸ்பின் பந்து வீச்சை சாதாரணமாக சிக்ஸர் அடிக்க உதவுகிறது. ரிஷப்பின் ஒரு பலவீனம் தான் அவரை அன்-ஆர்த்தடாக்ஸ் ஷாட்களை ஆட வைக்கிறது. அவர் அதை மேக்ஸ்வெல் போல் ஆடினால் சரி. ஏனென்றால் மேக்ஸ்வெல் அன்-ஆர்த்தடாக்ஸ் ஷாட்களை குத்துமதிப்பாக ஆடுபவர் இல்லை. இது ஸ்டம்ப்களுக்கு பின்னால் இருந்து பார்த்து மகேந்திர சிங் தோனி சொன்னது.

டி20 கிரிக்கெட்டில் இடது கை ஆட்டக்காரர்கள் ஆறு பேட்ஸ்மேன்களில் சரி பாதி 3 பேர் இருக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டு பேராவது இருக்க வேண்டும். இந்திய அணி அமைந்துள்ள விதத்தில் வேறு எதையும் பெரிய பிரச்சனையாக கருதக் கூடிய அளவில் இல்லை. எல்லாமே தேவையான அளவு இருக்கிறது. ஒரே பிரச்சனை இடது கை வீரர்கள் இல்லாமை!

✍️ Richards