இந்திய வீரர்களின் உயிர் தான் முக்கியம்.. அந்த நாட்டுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை.. ஹர்பஜன் விளாசல்

இந்திய வீரர்களின் உயிர் தான் முக்கியம்.. அந்த நாட்டுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை.. ஹர்பஜன் விளாசல்

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என கூறப்படுகிறது. கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து வருகிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டி இத்தனை ஆண்டுகளாக பிசிசிஐ இந்திய அணியை அனுப்ப மறுத்து வருகிறது.

இப்போதும் அதே விஷயத்தை முன்னிறுத்தி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்காது என பிசிசிஐ கூறி உள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்போ, பிசிசிஐ வேண்டும் என்றே இவ்வாறு செய்கிறது என அந்த முடிவை விமர்சனம் செய்து உள்ளது. இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் அந்த கடிதத்தை எங்களுக்கு காட்டுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி சமீபத்தில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், இந்திய வீரர்களின் உயிர் தான் முக்கியம். அந்த வகையில் பிசிசிஐ செய்வது முற்றிலும் சரி. பாகிஸ்தான் செல்ல வேண்டிய அவசியமே இல்லை எனக் கூறி இருக்கிறார். இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், “இந்திய அணி எதற்காக பாகிஸ்தான் செல்ல வேண்டும்? அங்கு நிறைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. அங்கு தினமும் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து வருகிறது.” என்றார்,

மேலும், “அங்கு செல்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை என நான் கருதுகிறேன். இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என பிசிசிஐ எடுத்து இருக்கும் முடிவு மிகவும் சரியானது. நமது வீரர்களின் பாதுகாப்பை தவிர நமக்கு வேறு எதுவுமே முக்கியமில்லை.” என்றார் ஹர்பஜன் சிங்.

தற்போது இந்திய அணி பாகிஸ்தான் செல்லவில்லை என்றால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துமாறு பிசிசிஐ கேட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த தொடரை நிர்வகித்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சிக்கிக்கொண்டு தவித்து வருகிறது. பிசிசிஐ-ஐ எதிர்த்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் எப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை வழிக்கு கொண்டு வரலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.