இந்த சிஎஸ்கே வீரரை மட்டும் வெளியே அனுப்பினால் 10 கோடி கிடைக்கும்.. டாம் மூடி அதிரடி அட்வைஸ்

இந்த சிஎஸ்கே வீரரை மட்டும் வெளியே அனுப்பினால் 10 கோடி கிடைக்கும்.. டாம் மூடி அதிரடி அட்வைஸ்

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை, அந்த அணி ஏலத்தில் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்பதும், தற்போது அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் உடன் மீண்டும் நெருக்கமாக இருப்பதும், அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்ட அஸ்வின், பிளேயிங் லெவனிலேயே உறுதியாக விளையாட முடியாத சூழ்நிலையில்தான் இருக்கிறார். மேலும், இதுவரை அவர் ஆடிய போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; அதிக ரன்களையும் வாரி இறைத்து வருகிறார். சிஎஸ்கே அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததோடு, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டாம் மூடி, அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேற்ற வேண்டும் என விமர்சித்து இருக்கிறார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பெரிய தொகையைத் தக்க வைத்து, அடுத்த ஏலத்தில் வேறு வீரர்களை வாங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது பற்றி அவர் பேசியதாவது: “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தத்துவத்தைப் பற்றி நான் புரிந்து கொண்ட வகையில், அவர்கள் அஸ்வினை வாங்கியதற்குக் காரணம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட, முதிர்ச்சியான வீரர்களை வாங்க வேண்டும் என்பதுதான். அந்தத் தத்துவம் ஐபிஎல் தொடரின் காலம் முழுவதும் அவர்களுக்கு வேலை செய்து இருக்கிறது.

ஆனால், அடுத்த ஏலத்திற்கு உங்களுக்கு அதிக தொகை வேண்டும் என்றால், நீங்கள் அஸ்வினை நீக்குவது அவசியமானதாகும். அவர் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கிறார். அது நிச்சயம் மிகப்பெரிய தொகை. ஆனால், பிளேயிங் லெவனிலேயே இடம் உறுதி செய்யப்படாத வீரருக்கு அது மிகவும் அதிகப்படியான தொகையாகும்.

எனவே அஸ்வினை அணியை விட்டு நீக்குவதைப் பற்றி சிஎஸ்கே நிர்வாகம் அவரிடம் பேசும் என நினைக்கிறேன். அது நிச்சயம் கடினமான ஒன்றாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார் டாம் மூடி.

அஸ்வின் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஒரு ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்திருக்கிறார். அஸ்வினுக்கு தற்போது 38 வயதாகும் நிலையில், அவரது ஐபிஎல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கனவே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அஸ்வின் விளையாடுவது சந்தேகம்தான்.

Previous articleரோகித் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை.. இந்திய அணிக்கு எப்போது திரும்ப வாய்ப்பு
Next articleஇலங்கை வளர்ந்து வரும் அணி மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2025