இப்படி ஒரு விஷயத்தை எந்த பவுலரும் செய்ததே இல்லை.. ஒரே ஓவரில் 2 கைகளில் பந்து வீசிய கமிந்து மெண்டிஸ்

இப்படி ஒரு விஷயத்தை எந்த பவுலரும் செய்ததே இல்லை.. ஒரே ஓவரில் 2 கைகளில் பந்து வீசிய கமிந்து மெண்டிஸ்

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் கமிந்து மெண்டிஸ், ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் இரண்டு கைகளாலும் பந்து வீசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்தத் தனித்துவமான சாதனையை நிகழ்த்தினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கமிந்து மெண்டிஸ், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் 13வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை இடது கை ஸ்பின்னராக வீசிய அவர், கடைசி மூன்று பந்துகளை வலது கை ஆஃப் ஸ்பின்னராக வீசினார். அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதற்கு முன் சர்வதேச போட்டிகளிலும் அவர் சில முறை இது போல பந்து வீசி இருக்கிறார். ஆனால், ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை ஆகும்.

மேலும், இதே ஓவரில் தனது நான்காவது பந்தில், 32 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்த கொல்கத்தா வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் பங்களித்த கமிந்து மெண்டிஸ் 27 ரன்கள் எடுத்தார்.

கமிந்து மெண்டிஸ் விசித்திரமாக பந்து வீசியும், பேட்டிங்கில் ரன் சேர்த்த போதும் ஹைதராபாத் அணியால் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயித்த 201 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 120 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இது ஹைதராபாத் அணிக்கு இந்தத் தொடரில் ஏற்பட்ட மூன்றாவது தொடர் தோல்வியாகும்.

ஐபிஎல் போட்டியில் இவ்வாறு ஒரு சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லே-யில் நடந்த நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த ஆசிய வீரர் என்ற பெருமையை மெண்டிஸ் பெற்றார்.

தனது 13வது டெஸ்ட் இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், 14 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்திருந்த முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில், ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் இணைந்து கமிந்து மெண்டிஸ் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த பட்டியலில் எவர்டன் வீக்ஸ் மற்றும் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் 12 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடத்தில் உள்ளனர்.

முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வெங்கடேஷ் ஐயர், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் விளாசினார். கேப்டன் ரஹானே 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவருடன் ரகுவன்ஷி அமைத்த 81 ரன் பார்ட்னர்ஷிப் வலுவான அடித்தளம் அமைத்தது.

இறுதிக்கட்டத்தில், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஜோடி அதிரடி காட்டியது. ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்தார். இந்த ஜோடி வெறும் 41 பந்துகளில் 91 ரன்கள் குவித்தது. இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இது இந்த சீசனில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

அடுத்து சன்ரைசர்ஸ் அணி சேஸிங் செய்த போது கொல்கத்தா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை 120 ரன்களில் ஆல் அவுட் செய்தது.

Previous articleரோஹித் சர்மா – ஜாகிர் கான் பேச்சு சர்ச்சை! வீடியோவை நீக்கிய மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடந்தது?
Next article14 லீக் ஆட்டம் முடிந்த நிலையில், டாப் 10 ஸ்கோர் அடித்த வீரர்கள் யார்?