இலங்கையின் இளம்படையிடம் அடிபணிந்தது இந்தியா ..!
ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி இன்று இலங்கை அணியுடன் அபுதாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர் வழக்கம் போல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் 6 ரன்களை குவித்த லோகேஷ் ராகுலை தீக்க்ஷன வெளியேறினார். தில்ஷான் மதுசங்க, விராட் கோலியை ரன் அடிக்காமல் மைதானத்திற்கு அனுப்ப முடிந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய கேப்டனுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் மூன்றாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.
41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவை ஷாமிக கருணாரத்ன வெளியேற்றினார். சூர்யகுமார் யாதவ் இன்று 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தலா 17 , ரவிச்சந்திரன் அஷ்வின் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய டில்ஷான் மதுசங்க நான்கு ஓவர்களில் 24 / 3 விக்கெட்டுக்களையும், தசுன் ஷனக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலக்கை துரத்த களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்தார்.
சரித் அசலங்க ரன் ஏதும் எடுக்காமல், தனுஷ்க குணதிலக ஒரு ரன்னில் ஆட்டமிழந்தபோது போட்டியின் அழுத்தம் இலங்கையை நோக்கி சற்று நகர்ந்தது.
இன்று அதிரடியாக 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்தபோது யுஷ்வேந்திரன் சாஹல் பந்தில் LBW முறையில் குசல் மென்டிஸ் சிக்கினார். பின்னர், அணித்தலைவர் தசுன் ஷனக்கவுடன் பானுக ராஜபக்சே இணைந்ததால், இலங்கை அணி வெற்றிப் பாதையில் நுழையத் தொடங்கியது.
கடைசி நான்கு ஓவர்களில் இலங்கை அணிக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் எனும் நிலைக்கு தசுனும் பானுகவும் அணியை இட்டுச் சென்றனர்.
புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் தசுனும் பானுகவும் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்தனர். அர்ஷதீப் சிங் வீசிய கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே இலங்கை அணிக்கு கொடுக்க அர்ஷதீப் இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
ஆனால் ஐந்தாவது பந்தில் பான்ட் செய்த தவறால் 2 கூடுதல் ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. தசுனும் பானுகாவும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் இணைத்த அதே வேளையில் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் 25 , தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 33 ரன்களையும் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வெற்றி மூலமாக இலங்கை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தி உள்ள நிலையில் இந்தியா தொடரில் இருந்து வெளியேறும் அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுமாக இருந்தால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இறுதி போட்டி இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படும்.