ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்காக இலங்கையில் இருந்து புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ACB யின் பிரதம நிறைவேற்று அதிகாரி (Chief executive officer) டாக்டர் ஹமீத் ஷின்வாரி இதை உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், இலங்கையிலிருந்து இந்தப் பணிக்காக அணுகப்பட்ட குறித்த பயிற்சியாளரின் பெயரை அவர் வெளிப்படுத்தவோ அல்லது சுட்டிக்காட்டவோ இல்லை.
இருப்பினும், ஆதாரங்களின்படி, ஹசான் திலகரத்ன குறித்த பணிக்கு முதல் தேர்வாக இருக்கலாம் என பேசப்படுகிறது.
83 டெஸ்ட் போட்டிகளிலும் ,200 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய 54 வயதான ஹசான் திலகரத்ன தற்போது இலங்கை மகளிர் அணியின் பயிற்சியாளராக உள்ளார், அவர் ஒரு தொடருக்காக மட்டுமல்லாமல் நீண்ட கால அடிப்படையில் அணுகினால் மட்டுமே பொறுப்பேற்பார் எனவும் அறியப்படுகிறது.
இந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அவுஸ்ரேலியாவின் ஷோன் டைட் நியமிக்கப்பட்ட நிலையில், துடுப்பாட்ட பயிற்சியாளராக ஹசானை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு வெற்றிகரமாக தன் பணியை முன்னெடுத்து வருகிறார்.
அண்மையில் நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பாகிஸ்தான், பங்களாதேஸ் சுற்றுலாவுக்கு திலான் சமரவீர நியமிக்கப்பட்டார்.
இதன் ஓர் அங்கமாக இன்னுமொரு இலங்கையின் முன்னாள் வீரர் இன்னுமோர் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளிநாட்டு பயிற்சியாளர்களை மிகப் பெரும் தொகை கொடுத்து பணிகளில் அமர்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.